இந்தியா, ‘சக்ராயுதம்’ என்ற பெயரில் ஒரு நவீன செயற்கைக் கோளை அனுப்ப இருக்கிறது. அதை வல்லரசு நாடுகள் விரும்பவில்லை. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் கூட்டாக, இந்தியாவின் முயற்சியை தோல்வி அடையச் செய்ய சதி செய்கின்றன.
இந்திய விஞ்ஞானிகளின் முயற்சிக்கு ஒரு தமிழ்நாட்டுச் சித்தர் உதவி செய்கிறார். எதிரி நாட்டு உளவாளிகளின் சதி முயற்சிகளை முறியடித்து இறுதியில், ‘சக்ராயுதம்’ எப்படி கோலாகலமாக விண்ணில் பாய்கிறது என்பதை இந்த நாவல் விவரிக்கிறது.
நூலாசிரியர், 30ம் அத்தியாயத்தில், சித்தரை அறிமுகப்படுத்தும் விதம் அருமை. ‘புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள் முதலிய வெவ்வேறு குணங்களைக் கொண்ட விலங்குகளும் காட்டின் உள்பகுதியில் இருந்து வெளியில் வந்து அருவிக் கரையில் அமைதியாக நின்றன.
மயில்களும், புறாக்களும், கிளிகளும் மைனாக்களும் பெரிய கழுகுகளுடன் இணைந்து நின்று அங்கு ஒரு அதிசயக் காட்சியை அளிக்க, சித்தர் தோன்றுகிறார். (பக். 109). ஆன்மிகமும், விஞ்ஞானமும் இரு இழைகளாகப் பயன்படுத்தப்பட்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
–எஸ்.குரு