ப.ஜீவானந்தம், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஏ.பி.பரதன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கே.என்.பணிக்கர் முதலானோர், விவேகானந்தர் பற்றி எழுதிய 11 கட்டுரைகளின் தமிழாக்கம் தான் இந்த நூல். விவேகானந்தரை தேச பக்த துறவி என்றும், இந்தியப் பண்பாட்டையும், மேலை நாட்டு விஞ்ஞானத்தையும் இணைத்து, ஒரு புதிய பண்பாட்டைக் காண விரும்பியவர் என்றும், இந்த நூலில் ப.ஜீவானந்தம் எழுதியுள்ளார்.
சிகாகோவில், விவேகானந்தருக்குப் புகலிடம் தந்த பெண்மணி, மேரி ஹேல். அவருக்கு, 1886, நவ., 1ம் தேதி, விவேகானந்தர் எழுதிய கடிதத்தில், தன்னை ஒரு சோஷலிஸ்ட் என்று தெரிவித்துள்ளார். ‘கிறிஸ்தவர் இந்துவாகவோ, பவுத்தர் கிறிஸ்தவராகவோ, இந்து பவுத்தராகவோ தேவையில்லை. ஒருவர், மற்றவரின் உணர்வை உள்வாங்கி, தமது தனித்துவத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். அவரவர் தத்துவத்திற்கேற்ப வளர வேண்டும்’ (பக்.62). இந்திய பண்பாட்டு அம்சங்களை வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், உலகம் எங்கும் பரப்பி, ‘நிறைந்து சொல்லுதல்’ என்ற வன்மை கொண்டவர் விவேகானந்தர். அதனால், அவரை எல்லாரும் மதித்து போற்ற முடிகிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
முகிலை ராசபாண்டியன்