அரசியல்வாதி, அமைச்சர், எழுத்தாளர், பேச்சாளர், இசை ஆர்வலர் என பன்முகம் கொண்டவர் நீதிபதி கிருஷ்ணய்யர். ஏழாண்டு காலம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், 700க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியுள்ளார். ஓய்வுபெற்ற பின், நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்கவும் செய்தார்.
‘புதிய தரிசனம்’ இதழில், ப.திருமலை, நீதிபதி கிருஷ்ணய்யர் அளித்த தீர்ப்புகள், அவரது வாழ்வில் முக்கிய சம்பவங்கள் ஆகியவை பற்றி எழுதிய தொடர், ‘மனித நேயத்துக்கு வயது நூறு’ என்ற நூலாக வெளிவந்துள்ளது. ‘போபால் விஷவாயு வழக்கின் தீர்ப்பு, மிகத் தாமதமாக வழங்கப்பட்டது மட்டுமல்ல; மிக மெத்தனமாக வழக்கை நீதிமன்றம் நடத்தியது’ என்று அவரால் விமர்சிக்கப்பட்டது.
கிருஷ்ணய்யரின் ஐந்து கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ளது, ‘யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால்’ என்ற நூல். முக்கியமாக, ‘அனைத்து மக்களுக்கும் ஒரு சட்டம், ஒரு குடும்பம், ஒரு நாடு என்பதை ஏற்போரே உண்மையான தேசபக்தர்கள்’ என்று, ஒரு கட்டுரை முடிகிறது. கிருஷ்ணய்யரை சரியாக புரிந்துகொள்ள உதவும் நூல்.