மேற்கத்தியப் பொருளியலறிஞர்கள், பொருளியலில் அறத்திற்கு இடமில்லை என உறுதிபடக் கூறுகின்றனர். ஆனால், வள்ளுவரோ, ‘அறம் சார்ந்த பொருளியலையே’ கூறுகிறார் என, ‘சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினுாஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு’ எனச் சான்று காட்டி
கூறுமிடத்திலேயே, படிப்பார் நெஞ்சை ஈர்க்கிறது இந்நூல்.
பொருளியல் பேராசிரியரான நூலாசிரியர் இந்நூலில் வள்ளுவம் தொடங்கி, பொருளியல் நூலாக சிலம்பை சித்தரித்து, அவ்வையைப் போற்றி, பாரதி, பாரதிதாசன் வழியாக இக்கால இலக்கியங்கள் வரை மிகப் பரந்த இலக்கியப் பயணம் செய்திருக்கிறார்.
வள்ளுவரும், காந்தியடிகளும் இன்றைய மதிப்பீட்டின்படி பொருளியல் படைத்த பொருளியலறிஞர்கள் அல்லர். ஆனால், மனித குலம் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணிய சமுதாய அறிஞர்கள் எனக் கூறி அறவழியில் பொருளீட்டி ஒப்பறிவாண்மையை பின்பற்றாவிட்டால், ‘அழக் கொண்ட எல்லாம் அழிப்போம்’ என, வள்ளுவர் எச்சரிப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற வள்ளுவர் கருத்துக்கு வலிவு சேர்க்கும் வகையில் அவ்வையார் கூறும் அறப்பொருளியலைச் சுட்டிக்காட்டுகிறார். மிகுதியான செல்வத்தைப் பெற்றிருப்பவர் அறநெறி ஒழுக்கத்தின்படி வாழாவிட்டால் அவர்கள் வீழ்ச்சிக்குச் செல்வமே காரணமாவதைக் கோவலன் மாலை வாங்கி மாதவியின் பின் செல்லும் செயல் காட்டுகிறது. பாண்டிய மன்னனிடமிருந்த பொருள் மயக்கம் அறத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. முதலில் பண்ட மாற்றாகத் தொடங்கி பன்முக வளர்ச்சி பெற்று வாணிபமாகப் பரந்து விரிந்து வெளிநாடுகளோடு வாணிபம் செய்து பொருளாதார நிலையில், சங்க காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றதை இளங்கோவடிகள் காப்பியப் போக்கில் வண்ண ஓவியமாகத் தீட்டியுள்ள திறத்தை இந்நூல் திறம்பட எடுத்தியம்புகிறது.
பொதுவுடைமை கருத்துக்கள் அறவழியில் நெறிப்படுத்தும், ‘இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்; இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்’ என்ற கருத்தும் உண்டு. தமிழ் கற்றவர் இலக்கியத்தைப் பார்ப்பதற்கும், பொருளியல் மேதை இலக்கியத்தைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு இந்நூலைப் படிப்போர்க்கு மட்டுமே புலனாகும்.
புலவர் சு.மதியழகன்