மழையை மட்டுமே நம்பி வேளாண்மை செய்த மக்கள், தங்களின் புன்செய் நிலத்தில் விதைத்து, விளைவித்து, சேமித்தவை தான் சிறு தானியங்கள்.
தங்களின் கடின உழைப்பிற்குத் தேவையான ஊட்டச்சத்தை அந்த சிறு தானியங்கள் தான் குறைவின்றி வழங்கின. அவற்றை எவ்வாறு பதப்படுத்த வேண்டும், எவ்வாறு சேமிக்க வேண்டும், எவ்வாறு சுவையாக, சமைக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருந்தனர்.
சிறு தானிய உற்பத்தி படிப்படியாக குறைந்த நிலைமாறி, அதன் மகத்துவத்தை மக்கள் அறியத்துவங்கி, அதைப் பயன்படுத்த முன்வந்திருக்கின்றனர்.
இச்சமயத்தில், இந்தியாவில் இருக்கும் சிறு தானிய, குறுந்தானிய ரகங்கள் பற்றியும், அவற்றின் சித்த மருத்துவம், அலோபதி, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகள் என, மருத்துவப் பயன்களின் முக்கியத்துவம் பற்றி இந்த நூல் விளக்குகிறது.
அது மட்டுமின்றி, தாவரவியல் பார்வையிலும் பல தகவல்கள் தரப்பட்டது சிறப்பாகும்.
சிறு தானியங்களில் உயிர்ச்சத்து ஒப்பீடு, ஊட்டச்சத்து விகிதங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறு தானியங்களில் இருந்து செய்யப்படும், அவல், சேமியா, நூடுல்ஸ், சூப் ஸ்டிக் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட உணவுகளின் சமையல் குறிப்புகள் என, பன்முக களஞ்சியமாக உள்ளது.
இலக்கியம், மருத்துவம், சமையல், தாவரவியல் என, அனைத்து துறை சார்ந்த ஒரே புத்தகமாக இதை பாதுகாக்கலாம்.
நடுவூர் சிவா