‘‘நம்முடைய பிறப்பு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய இறப்பு மட்டும் ஒரு வரலாற்றைப் படைப்பதாக இருக்க வேண்டும்,’’ என்ற முன்னாள் ஜனாதிபதி, விண்வெளி அறிவியலாளர், ஏவுகணை விஞ்ஞானி, தீர்க்கதரிசி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் தந்துள்ளார் நாகலட்சுமி சண்முகம். கலாமுடன் இணைந்து, ‘அக்னி சிறகுகள்’ போன்று பல நூல்களை எழுதிய அருண் திவாரியின் ஆங்கில நூலின் நடையொட்டி தமிழில் மூலநூல் போல் அமையப் பெற்றுள்ளது.
கடந்த, 1931 அக்., 15ம் நாள் தமிழகத்தில் பிறந்து, ஜனாதிபதியாய், ஷில்லாங் ஐ.ஐ.எம்., மைய மாணவர்களிடம், ‘வாழத்தக்க ஒரு பூமியை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தருணத்தில், 2015 ஜூலை, 27ல் தன், 83ம் வயதில் மறைந்த மாமேதையின் இந்நூல், 6 பகுதிகளாக அமைந்துள்ளது.
கலாமின் பிறப்பில் இருந்து, 1962ம் ஆண்டு அவர் வானூர்தி பொறியாளர் என்ற அடையாளத்தைப் பெற்றது வரை, பிரம்பிரகாஷ் போன்ற அறிவியலாளர்களுடன் பணியாற்றி விண்வெளி ஆராய்ச்சியில் உயர்ந்த நிலை பெற்றதை, ‘படைப்புருவாக்கம்’ என்ற இரண்டாம் பகுதியிலும்,
விண்வெளித் திட்டத்தில் அவரது தலைமைத்துவம் பற்றி, ‘மெய்ப்படுதல்’ என்ற மூன்றாம் பகுதியிலும், பொக்ரான் அணுகுண்டு பரிசோதனை, அரசின் அறிவியல் ஆலோசகர் பணி இப்படி, ‘விரிவாக்கம்’ என்ற நான்காம் பகுதியிலும், 2002 ஜூலை, 25ம் தேதியன்று ஜனாதிபதியாகி அதற்குப் பின் அவரது பணிகள், பயணங்கள், ஆட்சிமன்ற நடவடிக்கை என்று பலவகைப்பட்ட செயல்பாடுகளை, ‘பரவலாக்கம்’, ‘விடுதலை’ ஆகிய கடைசி இரண்டு பகுதி
களிலும் முழுமையாகப் பதிவு செய்துள்ளார். 33 ஆண்டுகள் அவருடன் பழகிய மூல நூலாசிரியர் அருண் திவாரி.
‘‘திருக்குறள், புனித குரான், அலெக்சிஸ் காரீல் எழுதிய, ‘மேன் த அன்னோன்’, வில்லியன் ஐஷ்லர் வாட்சன் எழுதிய, ‘லைட்ஸ் பிரம் மெனி லேம்ஸ்’ இவை நான்கும் என் இதயத்திற்கு நெருக்கமான புத்தங்கள்,’’ (பக்., 214) என்ற கலாம், அரவிந்தர், விவேகானந்தர், மகாத்மா காந்தி இவர்களை, ‘மூன்று மாமனிதர்கள்’ (பக்., 287) என்று நினைவு கூர்ந்துள்ளார்.
அரசியலில் ஈடுபடாமலேயே, மகாத்மா காந்திக்குப் பின், இந்திய தேச மக்களால் பெரிதும் போற்றப்பட்ட, மரியாதைக்குரியவராய் கருதப்பட்ட, சர்.சி.வி.ராமனுக்குப் பின், ‘பாரத ரத்னா’ விருதை, 1977ல், அறிவியலறிஞராய் பெற்ற அப்துல் கலாமின் முழுமையான இந்த வரலாற்று நூலை ஒவ்வொரு இளைஞனும் படிக்க வேண்டும். அனைத்துக் கல்விக் கூடங்களிலும் இடம் பெற வேண்டிய உயர்ந்த மனிதரின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.
பின்னலூரான்