வெற்றி, மகிழ்ச்சி, முற்றிலும் நிறைவு ஆகியவை ஆன்மிக பலத்தின் அடையாளம். அதை அறிய விஞ்ஞானம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றை அழகாக இழைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்திய தத்துவத்தின் நுட்பங்களை மேனாட்டு அறிஞர்கள் விளக்க முற்பட்ட போதும், ‘ஆன்மா’ என்பதை புரிய வைப்பத்தில் அதிக குழப்பங்களை கையாளுவர். அதை ஆசிரியர் தவிர்த்த முறையும், ஆன்மிக நேயத்தை விளக்கும் முறையும், ஆசிரியர் இந்திய உணர்வின் சிறப்பில், ஆழங்கால் பட்ட தன்மைக்கு அடையாளமாகும்.
நாம் எல்லாமே, ‘எனக்கு’ அல்லது, ‘என்னால்’ என்ற அழுத்தமான பின்னணி யில் வாழ்கிறோம். ஆனால், வெளி வேஷமாக மற்ற விஷயங்களைப் பற்றி அக்கறைப் படுபவராக, கடவுள் மீதான பக்தி கலந்த பயம் கொண்டவராக காட்டிக் கொள்கிறோம். இந்த மோசடி உணர்வு பலரிடம் நீடித்திருக்கிறது. நாம் நமது வாழ்க்கை என்றால் என்ன? உருப்படியான முழுமனித உணர்வுடன், வாழ முற்படாமல் அதிக தவறுகளை செய்து அதற்கு வருந்தாத உணர்வுடன், வாழ்க்கையின் தவறுகளை மூடி மறைத்து சமாளிக்கும் சுபாவம் நிரந்தரமாகி விட்டது.
அதுமட்டும் அல்ல விஞ்ஞானம் என்பது மனத்தின் செயல்பாடுகளை தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கும் தன்மையை கொண்டிருக்கவில்லை. எது அனுபவம், எது உள்ளுணர்வு, இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்பதை அறிவியல் படம்பிடிக்கவில்லை. மனிதனையா, அவனது செயலையா, அவனது உள்ளுணர்வையா, எது, ‘மனம்’ என்கிறோம் என்பதை அறியாமல் பலர் தங்களது வாதங்களை வைக்கின்றனர். எது அழியாததோ, அதை ஆன்மா என்கிற மனம் என்பதை நாம் கூறுகிறோம். அதே போல காதல் என்பது கொச்சையானது அல்ல; நமது எதிர்மறை எண்ணங்களை அழிப்பதுடன், உள்ளுணர்வில் மிகுந்த சுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு அபூர்வ செயலாகும்.
ஆகவே, மனம் என்பது ஒரு அலைபாயும் எண்ணக்கோவைகளை கொண்டது. அப்படி அலைவதை நிறுத்தி கட்டுக்குள் கொண்டு வருவது ஒரு உத்தி அல்லது கலை. ஆகவே, ஆன்மாவுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை அறிந்து கொள்வதே சிறப்பாகும். அப்படி ஒரு நிலையை அடையும் போது மனஇறுக்கம், துயர் எல்லாம் பட்டுப் போகும்.
இக்கருத்துக்களை அழகாக கோர்வையாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். பர்மியரான ஆசிரியர், தன் கல்வியை கிறிஸ்தவ பள்ளிகளில் கற்றபின், வாழ்க்கையில் ஏற்பட்ட அதிக முரண்பாடுகளை ஆய்ந்த பின், அமைதி தேடி கண்டறிந்தவைகளை தன் இந்து மத அடிப்படையில் ஆய்வு செய்ததே இந்த நூலாக மலர்ந்திருக்கிறது.
ஆன்மா குறித்த விஷயங்களில் குழப்பங்களை குறைத்து தெளிவான தகவல்களை தரும் ஆசிரியர் முயற்சி நிச்சயம் இளைஞர்களை கவரலாம்.
பாண்டியன்