இந்திய கலாசாரத்தை பெருமளவில் உள்வாங்கிக் கொண்ட நாடு கம்போடியா. இப்போது கம்பூச்சியா. உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவில் என்ற புகழை பெற்றிருக்கும் ஆங்கோர்வாட் கோவில் அங்கு தான் உள்ளது. பத்து நாட்கள் அந்நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து தான் கண்டவற்றை ஏராளமானவற்றை புள்ளி விபரங்களுடன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
மொழி, சமயம், நிலவியல், பண்பாடு, கட்டடக் கலை ஆகியவற்றில் இந்தியாவிற்கும், தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிற்கும் இடையே காணப்படும் ஒற்றுமையை அவர் விளக்கும் போது நமக்கு ஆச்சரியம் மேலிடுகிறது. அத்துடன் கம்போடியா நாட்டில் காணப்படும் இறை வழிபாட்டு முறை, உணுவு முறை, சடங்குகள், வடமொழி கலந்த தமிழ் – பிராமி கல்வெட்டுகள் போன்றவற்றை அவர் சுட்டிக் காட்டும் போது, கம்போடியா தமிழகத்தின்
நிழலாகவே இருக்கும் போல் இறுக்கிறதே என்றே நம்மை எண்ணத் தூண்டும்.
நூலாசிரியர் மூளை நரம்பியல் பேராசிரியராய் இருப்பதால், மனித மூளைக்கும், கம்போடியா கோவில்களுக்கும் இடையே இருக்கும் அமைப்பு, ஒற்றுமை பற்றி ஒப்பிட்டு எழுதி முடிந்திருக்கிறது. இதே சாதாரண சுற்றுலா பயணிகளால் இதைக் கூர்ந்து கவனித்திருக்க இயலாது. நல்ல வழ வழ உயர் ரக தாளில், ஏராளமான வண்ணப்படங்களுடன் நூல் வெளியிட்டு இருக்கின்றனர். படித்து, ரசிக்க வேண்டிய நூல்.
மயிலை சிவா