மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு திறந்த புத்தகம். அந்தப் புத்தகத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அதுவே ஓர் அறிஞராக இருப்பின் நமக்கு இன்னும் கூடுதல் தகவல்களும், செய்திகளும் கிடைக்கும். அந்த அறிஞர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நூலாக்கிப் படித்தால் தீங்கனியாக இனிக்கும்தானே! அப்படியான ஒரு புத்தகம் தான், ‘நினைவின் நிழல்கள்.’
பல்வேறு துறை சார்ந்த சாதனை மனிதர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம், அனுபவங்கள், தான் பேட்டி கண்ட மனிதர்கள் பற்றி தன் மனதில் முகிழ்ந்தவற்றை நூலாகப் படைத்திருக்கிறார் மணா.
கவிஞர் தருமு சிவராமுவில் தொடங்கி, சுந்தர ராமசாமி, கமல், இளையராஜா, சிதம்பரம் ஜெயராமன், ஜெயகாந்தன், நம்பியார், ஓவியர்கள் மருது, ஆதிமூலம் என, சாதனை மனிதர்கள் பலர் இந்த நூலில் இருக்கின்றனர். அவர்கள் மணா நடையில், பாவனைகளில் பேசுகின்றனர். தன் துறை சார்ந்த சக கலைஞர்களை மற்றொரு கலைஞரை, போட்டியாளனாகவே கருதுவது வழக்கம். ஆனால் ஓவியர் மருது பற்றி ஆதிமூலம் சிலாகித்து கூறியிருக்கும் கருத்துகள், எல்லோரையும் ரசிக்கத்தக்கது என்பதை மெய்ப்பிக்கிறது. ஆதி மூலம் பற்றிய பேட்டி கட்டுரையில், ‘இந்திய சிற்பங்களுக்கு ஒரு ஒழுங்குமுறை இருக்கும். சதையை கட்டுக்கட்டாகக் காண்பிக்க மாட்டார்கள். ஆண் என்றால் தோள், மார்பு எல்லாம் விரிந்து இருக்கும். பெண் என்றால், அந்தப் பெண்ணின் உயரம் ஆணின் காது வரைக்கும் தான் வர வேண்டும் என்ற பாரம்பரியம் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் ரவிவர்மாவின் ஓவியங்களில் தவிர்க்கப்பட்டது’ என்று ஓவியம், அது சார்ந்த புரிதல்களை நமக்கு நிறையவே புரிய வைக்கிறது இந்தப் புத்தகம்.
மன்னர், ஜமீன் ஆட்சி முறையில் இருந்து நாம் மாறி விட்டாலும் பழைய பொக்கிஷங்களை, கலாசாரங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும், ‘சில சரித்திர சரிவுகள்’ போன்ற கட்டுரைகளும் இந்த நூலில் அடக்கம்.
இ.எஸ்.லலிதாமதி