விடுதலையடைந்து, 70 ஆண்டு காலத்தில் இன்றைய நீர்நிலைகள், குடிமராமத்து ஒழிந்து, பொதுப்பணி துறை, வனத் துறை, கனிம வளத் துறை, வருவாய்த் துறை போன்ற அரசின் பல துறைகளின் கண்காணிப்பில் அமைந்த மாற்றங்களையும், பசுமைப் புரட்சி தந்த நவீன வேளாண்மையும், பகுத்தறிவுப் புரட்சி தந்த சித்தாந்த அறிவும் சம்சாரிகளை முன்னேற்றிஉள்ளதா என்பதை கேள்வி கேட்க முனைகிறது இந்நாவல்.
ஆன்மிகத்தின் ஆணி வேராகவும், நம்பிக்கைகளின் நாற்றங்காலாகவும் விளங்கும் கிராமங்களில் நிகழ்வுறும் நிகழ்வுகளை, வட்டார வழக்கில் மிக மென்மையாக எளிய நடையில் விளக்குகிறார் நாவலாசிரியர்.
வெள்ளைக்காரன் நமக்குச் சுதந்திரம் கொடுத்தபோது கிட்டத்தட்ட, 36 ஆயிரம் கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளையும் ஒப்படைத்தான். அவையெல்லாம் முள்ளும் மொடலுமாய், சீமை கருவேல மரங்களும் நாட்டு கருவேல மரங்களுமாய் வனமாக மாறிப் போச்சு.
‘உருளைக்குடி’ என்னும் அந்த கிராமம், கால்நடைகள் இல்லாத, கிணறுகளில் தண்ணீர் இல்லாத, தானியங்கள் குவித்த களங்கள் இல்லாத, மாட்டு வண்டிகள் இல்லாத, ஊருணிகள் இல்லாத கிராமமாய் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது.
மண்வெட்டி இல்லை; ஆனால், வேல்கம்பும், வீச்சரிவாளும், சில அரசியல் கட்சிக் கொடிகளும் அவ்வூரை அலங்கரிக்கின்றன. ஜாதி கட்சியின் கொடி உயரமாக பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. மொத்தத்தில் எண்ணற்றோர் இதயங்களில், ‘சூல்’ கொண்ட எண்ணங்களை மவுன மொழியாய் பிரதிபலித்துள்ளார் நூலாசிரியர்.
புலவர் சு.மதியழகன்