இளையராஜா இசையின் சிறப்பை பேசும் உன்னத நூல். வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்நாடக இசை வர்ண மெட்டுகளை போல் மக்களிடம் நாட்டுப்புற இசை வர்ண மெட்டுக்கள் ஏராளமாக உண்டு. அவைகளை தேடித் தேடி கவனத்துடன் மனதில் வாங்கிப் பதிவு செய்து கொண்ட ஞானியரில் மகா ஞானி நம்முடைய இளையராஜா அவர்கள் என்பது கி.ராஜ நாராயணனின் கணிப்பு. ஆனால், இளையராஜாவோ அடக்கத்துடன் பேசுகிறார்.
‘இசை என்பது மிகப்பெரிய ஆற்றல். அதில் நான் செய்ய முடிவது கொஞ்சம் தான். எனக்கு விதிக்கப்பட்ட கால அளவிற்குள் பார்க்க முடிவது கொஞ்சம் தான். பார்க்க முடியாதது எவ்வளவோ அதை வெளிப்படுத்த இறைவன் தான் மனம் வைக்க வேண்டும். முனைப்பாக இதில் இறங்கி, அனைத்தையும் செய்து விட முடியும் என்று தோன்றவில்லை. என் மூலமாக கொஞ்சம் வெளிப்படுகிறது.(பக்.,70) இளையராஜாவின் இசை இரண்டு தலை முறைகளை கடந்து இப்போது மூன்றாவது தலைமுறையினரிடம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இசை ஒரு தத்துவம், அது ஒரு கலாசாரம், ஒரு காலத்தின் வரலாறு என்று இந்த உன்னத நூல் அறிவிக்கிறது. இசைத்தமிழ்ப் பொக்கிஷம்!
எஸ்.குரு