பயண நூல் ஒன்றை நாட்குறிப்புப் போல் எழுதி புதுமை செய்துள்ளார் முனைவர் இரா.மனோகரன். மஞ்சள் ஆறு பாயும் சீனாவைப் பற்றி தமிழருக்குத் தெரிவிக்கும் நூல் இது. பணி ஓய்வு பெற்றதும் சீனாவுக்குப் போய் நமக்காக அந்தப் பயண வரலாற்றைப் படைத்துத் தந்துள்ளார்.
நம் வீட்டின் வரவேற்பறையைப் போல் பராமரிக்கப்படும் சீனாவின் பொதுக் கழிப்பிடத்தையும் டாக்சிக்காரர் மீட்டர் கட்டணம் மட்டும் வாங்குவதையும் பார்க்கும்போது நமக்குப் பொறாமையாகத் தான் இருக்கிறது.
சீனாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நாடகம் நடத்தப்படுவதைப் பார்க்கும்போது அவர்களின் பாரம்பரிய உணர்வு நமக்கு வியப்பைக் கொடுக்கிறது. தமிழகத்தின் பேய் போல் சீனாவிலும் பேய் என்னும் பகுதியைப் படிக்கும்போது, நம் ஊர்ப் பேய் தான் உடனே வந்து அச்சத்தைத் தருகிறது. நம் இந்தியாவின் புத்தர் அங்கே அனைவராலும் வணங்கப்படும் தெய்வமாகி இருக்கிறார்.
பெல் கோவிலின் அமைப்பும், வாஜ்பாயும், மோடியும் சென்று வணங்கிய கோவில் என்னும் பெருமையும், ராஜேந்திரனை மட்டும் அல்ல நம்மையும் பிரமிக்க வைக்கிறது. எளிய மொழி நடையில் எல்லாரையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த நூல் பயண இலக்கிய நூல் வரலாற்றில் இடம் பெறும்.
– முகிலை ராசபாண்டியன்