உலகத்தில் மனித இனம் தோன்றிய வரலாறு, விழுப்புரத்தில் கிடைத்த, 1,80,000 ஆண்டுகள் பழக்கமுள்ள மண்டை ஓடு, முதலான பிரமிப்பான தகவல்களுடன் நூல் துவங்குகிறது. கண்டங்களின் தோற்றம், சுனாமி என்னும் ஆழிப் பேரலை, எரிமலை வெடிப்புகளின் தாக்கம், அதனால் ஏற்படும் பேரொலி முதலான, அரிய தகவல்களை தருகிறது இந்த நூல்.
உலகத்தில், மக்கள் தோற்றத்தை, ஏழாயிரம்... எட்டாயிரம்... ஆண்டுகளுக்கு முன் என, சில சமயவாதிகள் வரையறை செய்து கொண்டிருக்கும்போது, நம் சித்தர்கள் ஆன்மாவைப் பற்றி அலசியிருக்கின்றனர் என்பதை, தெளிவுபடுத்தியுள்ளார் சுவாமி அகமுக நாதர். ‘நான் அறியாதவன் என்பதை அறிந்தவன்’ என்னும் சாக்ரடீசின் தன்னடக்கமும், ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்னும் அவ்வையின் தன்னடக்கமும், அறிவுக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது.
திருமூலம் நந்தீசரிடம் கற்றுள்ளார். இவர் அகத்தியர், பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு கற்பித்துள்ளார். இவர் திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள, சாத்தனூரில், கி.மு., 15ல் பிறந்தவர் என, திருமூலரின் வரலாற்றைத் தெளிவுபடுத்துகிறார். மூன்று பாகங்கள் அடங்கிய இந்த நூல், வாழ்க்கையை உள்நோக்கிப் பார்க்கிறது. இந்த சிந்தனைத் தெளிவை, இந்த நூலை ஆழ்ந்து படிப்பவர்கள் அடைய இயலும்.
முகிலை ராசபாண்டியன்