சென்னையில் டிசம்பர், 2015ல், ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத் தாண்டவம், காவிய மரபுகளோடு துவங்கப்பட்டாலும், காவியக் கூறுகளோடு முழுமை பெறவில்லை. நூலின் இணைப்பில் உள்ள பல்வேறு இதழ்களில் வெளியான, 60க்கும் மேற்பட்ட படங்கள் நூலாசிரியரின் கடின உழைப்பையும், கவித் திறனையும் இணைத்துப் பார்க்கச் செய்துள்ளது.
‘‘வதை செய்யும் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு, வாழ்க்கைக்கு அரணமைக்கத் துடித்துச் சென்றாம்...’’ (638) என்னும் இறுதிப் பகுதி நூலாசிரியரின் சமூகப் பொறுப்பை உணர்த்துகிறது.
நான்கு பாகங்கள், 66 இயல்கள், 643 பாடல்களில் அமைந்த இக்காவியம், சென்னையின் வரலாற்றையும், ஓரளவு தொட்டுக் காட்டியுள்ளது. சிறு சிறு பிழைகள் உள்ளன. கால்வாய், வாய்க்கால் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ‘பக்கிங்ஹாம் வாய்க்கால்’ (பக்.174) என்பது தவறு.
‘ஆண்டே போயே விட்டார்கள்’ (பக்.174) என்பது ‘மாண்டே போயே விட்டார்கள்’ எனத் திருத்தப்பட வேண்டும்.
நூலாசிரியரின் வித்தியாசமான இந்தக் காவியம் அவரது பரந்துபட்ட கவிதை உணர்ச்சியையும், ஆற்றொழுக்க நடையையும் புலப்படுத்துகிறது. அவசர கதியில் வந்துள்ள இதை இன்னும் முறைப்படுத்தி, செம்மைப்படுத்தினால், காவிய அந்தஸ்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. எனினும் வரவேற்கத்தக்க வரலாற்றுக் கற்பனைக் கவிதை நூல்.
– பின்னலூரான்