கோவில் கலையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, பல திருப்பணிகளைச் செய்த பெண்மணி செம்பியன்மாதேவி. கண்டராதித்தன் மனைவியும், உத்தமசோழனின் தாயாருமான இவர் எடுப்பித்த கோவில் கற்றளிகள் தமிழகத்தில் மிகுதி.
தம் பெயரிலேயே ஓர் ஊர் அமைத்து, அங்குச் சிவனுக்குக் கோவில் எடுப்பித்து, நாளும் வழிபட்டவர். செம்பியன்மாதேவி கலைப்பாணி என்று சிறப்பாக அழைக்கத்தக்க வகையில், பல கற்சிலைகளையும், செப்புத் திருமேனியையும் அமைத்துக் கொடுத்து, தமிழக வரலாற்றில் தமக்கெனத் தனி அடையாளத்தைப் பெற்றவர்.
செம்பியன் மாதேவியின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதத்தில், இந்நூலாசிரியர் அரிதின் முயன்று இந்நூலை உருவாக்கியுள்ளார். இது ஆய்வு நூல் என்பதற்கான பதிவுகள், இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
கோனேரிராசபுரம் பற்றிய செய்திகளை முதலாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூலில் வரலாற்றுப் பின்னணி, இலக்கிய இழைகள், கல்வெட்டுச் செய்திகள், கவின்மிகு கட்டடக் கலை, தலைப்புகளில், தம் ஆய்வுத் திறத்தைப் புலப்படுத்தியுள்ளார். 10ம் நூற்றாண்டளவில் உருவான கோனேரிராசபுரம், திருநல்லம் என்று பக்தி இலக்கியங்களில் அழைக்கப்படுகிறது. பொதுவாக, கிழக்குத் திசை நோக்கித் தான் கோவில்கள் அமைக்கப்படுவது வழக்கம் மேற்கிலும் சில உள்ளன. அதற்கான காரணத்தை நூலாசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். திருநல்லம் கோவில் செம்பியன் மாதேவியால் எடுப்பிக்கப்பட்டதாகும். அக்கோவில் பற்றிய செய்தியை விரிவாகத் தருகிறார் ஆசிரியர். செம்பியன் மாதேவியின் உருவ அமைப்பை அருமையாய் விளக்கியிருக்கிறார். அவரது பல பண்புநலன்களைப் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். அவரது பின்னணியில் பிற்காலச் சோழர்கள் பற்றிய செய்திகளைச் சுருங்க உரைத்துள்ளார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றுமுடைய, நல்லம் திருக்கோவில் தேவார மூவர்களால் பாடப்பட்டிருக்கும் செய்திகளை, அகச்சான்றுகளோடு ஆராயும் ஆசிரியர், செம்பியன்மாதேவி பல செற்கற்கோவில்களைக் கருங்கற் கோவில்களாக மாற்றியதையும், பல அறப்பணிகள் செய்ததையும் கல்வெட்டின் அடிப்படையில், விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
சிற்பக் கலைச் சிறப்புகள் என்னும் இயலில், பண்டைய சிற்பக்கலை அறிஞர்கள் சிலரது பணியைச் சுருக்கமாகத் தந்துள்ளார். படிமக்கலையின் பரிமாணங்கள் என்னும் தலைப்பில் அமைந்துள்ள இயல், போற்றும்படி உள்ளது. இறுதி இயலான ஓவியங்களின் உன்னதம் என்னும் தலைப்பில் உள்ள செய்திகள் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளன. அக்கோவில் மண்டபங்களில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் குறித்த தகவல்கள், ஆய்வில் நன்கு வெளிப்பட்டுள்ளன.
இந்நூலாசிரியர், தாம் எடுத்துக் கொண்ட பொருளை நூலாக்கியிருக்கும் விதம், நம்மை வியக்கச் செய்கிறது. நூலில் காணப்படும் பிற தகவல்களும் ஆசிரியரின் அரிய முயற்சியைக் காட்டும். தமிழாராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் ஆகியோர் இந்நூலைப் போற்றுர்.
– ராம. குருநாதன்.