மரபு வழியிலான செய்யுட்களுக்கு விரிந்த இலக்கணம் தமிழில் உண்டு. தமிழில் பழஞ்செய்யுள் வடிவங்கள் யாவும், யாப்பியலோடு தொடர்புடையன. தொல்காப்பியம் செய்யுளியலில் கூறியுள்ள இலக்கணங்கள் செய்யுட்களுக்கு உரியவை. இந்நூல், தேவார மூவர்களின் பண் சுமந்த பாடல்களில் காணப்படும் செய்யுள் வடிவங்களை, நுண்ணிய முறையில் ஆராய்ந்து எழுதப்பட்ட ஆராய்ச்சி நூலாகும்.
நூலாசிரியரின் கடின முயற்சியும், உழைப்பும் வெளிப்படும் வண்ணம் அமைந்த இந்நூல், தேவாரத்தில் காணப்படும் பல வகையான செய்யுள் வடிவங்கள், அவற்றின் இனங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக ஆராய்கிறது. இசையோடு யாப்பும் இணைந்து செல்லும் நுட்பத்தை ஆங்காங்கே விளக்கிச் சொல்லும் முறை, மிகுந்த பாராட்டுக்குரியது. பல புதிய செய்திகளை யாப்பியல் தொடர்பாகச் சிந்தித்துள்ளார் ஆசிரியர்.
திருஞானசம்பந்தரே முதன் முதலாக ஒன்பதின் சீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பாடியதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், தேவாரப் பாடல்களில் ஒரு சில தவிர, பிற அனைத்தும், ‘ஏ’ என்று முடியும் முறையை விளக்குகிறார். குறுந்தொகை, தாண்டகம், கூன் இவற்றிற்குரிய தனித்தன்மையை நுட்பமாக உணர்த்தும் ஆசிரியர், பதிகம், திருமுக்கால் முதலியவற்றைத் தம் ஆய்வுத் திறத்தால் வெளிப்படுத்தியிருப்பது போற்றுதலுக்குரியது. திருஞானசம்பந்தர் கலித்துறைப் பாலினத்தை வேறு வேறு சந்தங்களை எழுப்புவதற்குரிய பாலினமாகக் கையாண்டிருப்பதை, தம் ஆய்வுத் திறத்தால் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார் (பக்.59). கலிப்பாலில் அராகம் என்னும் உறுப்பு பெயர் பெற்றதற்கான காரணத்தை ஆராய்ந்திருப்பது சுவையானது (பக்.73).
தாண்டகம் பற்றிய கருத்தை ஆராயும் ஆசிரியர், அப்பருக்குப் பெருவிருப்புடையது தாண்டகம் என்பதையும், தமிழுக்கென்று தாண்டகம் இலக்கணம் படைத்துக் கொண்டு, அவர் பனுவல் பாடியருளியதை தெரிவிப்பர் (பக்.146).
தேவார ஆசிரியர்கள் புதியனவாகவும், சிறப்பானவையுமான பல நுட்பங்களை வழங்கியுள்ளதை நுணுக்கமாகவும், மிகுந்த அர்ப்பணிப்போடும், நூலாசிரியர் வகுத்தும் பகுத்தும் தொகுத்தும் தந்திருப்பதைப் பாராட்ட வேண்டும். இந்நூலுக்கு அரியதோர் ஆராய்ச்சி உரையை அணிந்துரையாக வழங்கியிருக்கும் முறையும் மிகுந்து பாராட்டுக்குரியதாகும்.
தமிழக ஆய்வுலகில் யாப்பியல் ஆய்வு குறைவாகவே நிகழ்ந்துள்ளது. அக்குறையைப் போக்கும் வகையில், இந்நூலின் ஆய்வு நெறி போற்றக்கூடியதாக இருப்பதை தமிழ் ஆய்வுலகம் வரவேற்கும்.
ராம. குருநாதன்.