இந்தியா – இலங்கை இரண்டிற்குமான வரலாற்று நிகழ்வுகளைச் சங்க இலக்கியக் கருத்துக்களுடன் இணைத்துக் காணும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. வரலாறு முதலும் முடிவும் இல்லாதது. இவ்வரலாற்றில் மறைந்துள்ள, மறைக்கப்பட்ட பல செய்திகள் உள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது.
அசோக மன்னனின் இளவலே இலங்கை மன்னன் திஸ்ஸன். கோச்செங்கட் சோழனும் ஒரு கரிகாலனே! இமயம் வென்ற கரிகாலனின் காலம், கி.மு.274–177 முதலிய தகவல்கள் இதில் உள்ளன.
கலிங்க மன்னன் காரவேலன் காலத்தில் தமிழ் மன்னர்களாக இருந்தவர்கள் யார்? என்னும் வினாவை முன்வைத்து இந்நூல் செதுக்கப்பட்டதாகக் கூறும் நூலாசிரியர், காரவேலன் காலத்தைச் சேர்ந்த செய்திகளை மையமாகக் கொண்டு ஆறு கட்டுரைகளை இந்நூலில் முன்வைத்துள்ளார்.
காரவேலனின் கல்வெட்டு குறித்து விளக்கும் முதற்கட்டுரை, காரவேலனுக்கும், பாண்டிய மன்னனுக்குமான தொடர்பையும் இருவரும் சமணம் சார்ந்து விளங்கியதையும் எடுத்துரைத்து, இலக்கிய ஆதாரங்களையும் அலசி ஆய்வதாக அமைகிறது.
இரண்டாவது கட்டுரை காரவேலன் காலத்திய சேர மன்னர் யார் என்பதை ஆயும் வகையில், ‘உதியன் எனவும் தித்தன் எனவும் மூவர்’ என்னும் தலைப்பில், அசோகர் கால சேர மன்னர்களில், கரிகாலன் என்பவன் உதியன், தித்தனைக் காட்டிலும் பெரிதும் பேசப்பட்டுள்ளதை கொண்டு, கரிகாலன் அசோகர் காலத்தைச் சேர்ந்தவனா என்பதை ஆய்வதாக மூன்றாம் கட்டுரை அமைகிறது. இது கோச்செங்கட் சோழனை கல்லணை கட்டிய மூலமுதற் கரிகாலனாக கொள்ளக் கிடைத்துள்ள இலக்கிய சான்றுகளை கொண்டிருக்கிறது. தொடர்ந்து கரிகாலன் – உதியன் சேரல் இவர்கள் மூன்றாம் நூற்றாண்டினர் எனில் இவர்களது வாரிசுகளே சேர, சோழ வாரிசுகளாக இருக்கக் கூடும். இந்த கருத்தை முன்வைத்து காரவேலன் காலச் சேர, சோழர்கள் எனும் நான்காம் கட்டுரை அமைகிறது. காரவேலன் காலத்தில், சேர நாடு, இமயவரம்பன் ஆட்சியின் கீழும், சோழ நாடு, ஞாயிற்றுச் சோழன் ஆட்சியின் கீழும் இருந்துள்ளன என்பதை ஆசிரியர் முன் வைக்கிறார்.
பின் இணைப்பாக அமைந்துள்ள ஆறாவது கட்டுரை சோழ அரசர்களது வரலாறு குறித்த செய்திகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு காரவேலன் காலத்திய தமிழ் மன்னர்கள் குறித்து ஆராயும் இந்நூல் ஒரு வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது.
– பன்னிருகை வடிவேலன்