கூத்தின் மீது தீராத பற்று கொண்ட சிறுவன், ஒருநாள் கட்டபொம்மன் கூத்து பார்க்க செல்கிறான். மூக்கும் முழியுமான அச்சிறுவனுக்கு, வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க அழைப்பு வந்தால் அது அதிர்ஷ்டம் என்று தானே செல்ல வேண்டும். ஆனால் அச்சிறுவன், அவ்வாறு அதை கருதினானில்லை. ஏனெனில் அவன், எதில் நீ புகழ் பெற விரும்புகிறாயோ அது குறித்த ஈடுபாடும், திறமும் உன்னையும் அறியாது உன்னுள் வளர்ந்து ஒருநாள் உன்னுள்ளிருந்து வெளிப்போந்து நிற்கும். அதுவே தத்துவ நியதி என உணர்ந்திருந்தான். அச்சிறுவன் தான் சிவாஜி கணேசன்.
ஆரம்பத்தில் சீதை, சூர்ப்பனங்கை, கிருஷ்ணனின் தாய் தேவகி, சரசுவதி போன்ற பெண் வேடங்களில் சிறந்த அபிநயங்களை வெளிப்படுத்தி, அக்காலத்தே நாடகத் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த, எம்.ஆர்.ராதா உள்ளிட்டோரிடம் பாராட்டைப் பெற்றது முதல் பின்நாளில், ராதாவின் நாடகத்திலே முதன்மையான வேடம் போடுமளவிற்கு உயர்ந்தது வரையிலான நிகழ்வுகளை, விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற கூற்றுக்கு சிவாஜி சான்றென்பதை வலியுறுத்தும் வகையில் இந்நூலாசிரியர் விளக்கிச் சொல்லும் விதமழகு.
முதன் முதலாக சிவாஜி, பராசக்தி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 250 ரூபாய் சம்பளம் பெற்றது, கண்ணதாசன், கருணாநிதி உடன் அவர் பணிபுரிந்த படங்கள், எம்.ஜி.ஆர்., உடன் நடித்த கூண்டுக்கிளி, ஜெமினி கணேசனின் உள்ளக் கிடக்கையை அறிந்து சிவாஜி விட்டுக் கொடுத்த படம், அண்ணா, காமராஜர் போன்றோர் உடனான நட்பு, தம் இல்லத்து உணவை சக நடிகர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தது, மருத்துவமனையின்றி வாடிய ஈழத் தமிழர்களுக்கு கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டியது என, சிவாஜி, திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஒரு கர்ணனாகவே வாழ்ந்தாக கூறும் இந்நூலாசிரியர், தம் கருத்துக்கு சான்றுக்கழைக்கும் விடயங்கள் பெரும்பான்மையோர் அறிந்திடாதது.
தம் நடிப்பில் நவரசங்களையும் வெளிப்படுத்தி, தமிழ் திரைவானில் ஒரு விடிவெள்ளியாக திகழும் சிவாஜியின், 50 ஆண்டுகள் திரை அனுபவங்களை, வாசகன் சோர்வுறா வண்ணம், படிக்க படிக்க வியக்க வைக்கும் விதத்தில் அரிய விடயங்களின் தொகுப்பாக உருவாக்கித் தந்துள்ள இந்நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்நூல், திரையுலகப் பிரியர்களுக்கு ஒரு புத்தக பொக்கிஷம்.
–ஆதி