காவல் பறவை இனத்தைச் சேர்ந்த கரிச்சான் குருவி, தன்னை அண்டி வாழும் பறவைகளில் ஒன்று அபாயக் குரல் கொடுத்ததும், சகப் பறவைகளைக் காக்க வேண்டி, காகம், வைரி மற்றும் வல்லூறுகளை துணிவுடன் எதிர்த்து சண்டையிடுகிறது. இதில் வியப்பென்ன வெனில், கரிச்சான் குருவி, எதிரி பறவைகளை விட உருவத்தில் சிறியது. பெரிய பறவைகளை கண்டு, அவை ஒரு போதும் பின்வாங்குவதில்லை. தன் துணிவும், உறுதியும் மனிதா உன்னிடத்தில் ஏன் இல்லை என, அக்குருவி கேட்பதாக உள்ள முதல் கட்டுரையே, சோர்ந்து கிடக்கும் மனிதனுக்கும் சுறுசுறுப்பு ஊட்டும் விதமாக உள்ளது.
அதே போல், 15க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வழி மனித மனங்களை துகிலுரித்து, உயர்திணையை விட அஃறிணைகள் உயரிய பண்புகளுடன் வாழும் பாங்கை எடுத்தியம்பும் கட்டுரைகள் அருமை. அதில், சொத்து வேண்டுமாயின் நிம்மதியை விடு; நிம்மதி வேண்டுமாயின் சொத்துரிமையை விடு என்று கூறும் கட்டுரை சிறப்புக்குரியது. (பக். 41) நகை செய்யும் தொழிலில் தந்தைக்கு உதவியாக நகாசு வேலை செய்த சிறுவன், தம் பாட்டுத்திறத்தால் ஊரையே வியப்பில் ஆழ்த்தி, பின்னாளில் திரையுலகில் நுழைந்து ஒட்டுமொத்த தமிழரையும் தன் வசப்படுத்திய எம்.கே.தியாகராஜர் பற்றியும், ஹரிதாஸ், சாரங்கதாரா, சிந்தாமணி, அம்பிகாபதி, சிவகவி போன்ற அவரது திரைப்பட செய்திகள், பாகவதர் சிறை சென்றது ஏன் என, பலராலும் அறியப்படாத விடயங்கள் இதில் ஏராளம். (பக். 265)
நாடகத் துறையில் கொடி கட்டிப் பறந்த பாய்ஸ் கம்பெனி, அதிலிருந்த நாடக நடிகர்களான சாரங்கபாணி, ஜெயராமன், தமிழ் நாடக உலகத் தந்தையான சங்கரதாஸ் சுவாமிகள், சின்னப்பா, என.எஸ்.கலைவாணர் குறித்த தகவல்கள் கிடைத்தற்கரியன. (பக். 310) நாடகத் துறையில் சிறந்து விளங்கிய
எம்.ஆர்.ராதாவின் அரம்ப கால வாழ்க்கை, அவரது திருமணம் பற்றிய விவாதம், கலைவாணரை சுடுவதற்காக ராதா வாங்கிய துப்பாக்கி, ஒரு
சத்தியத்தின் பொருட்டு அவர் விட்டொழித்த குடிப்பழக்கம், தென்னாப்பிக்காவில் வெள்ளையரின் நிறவெறியை எதிர்த்து போராடி உயிர்நீத்த வள்ளியம்மை ஊருக்கு காந்தி வந்தது, அவரது வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் என, பலதரப்பட்ட செய்திகள் எம்.ஆர்.ராதாவே கூற, சிறைச்சாலை சிந்தனை எனும் தலைப்பில் அவற்றை விந்தன் தொகுத்துள்ள பாங்கும், விவரனையும் சிறப்பு. (பக். 430)
பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் என, இலக்கிய உலகம் குறித்த செய்திகளுடன் பார்த்திபன் கனவு, கூண்டுக்கிளி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, வசனம், பஜ கோவிந்தம் நூலுக்கு மறுப்பாக எழுந்த பசி கோவிந்தம், பெரியாரின் அரிச்சுவடி உள்ளிட்ட பல்வேறு சிறுகட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு, படிப்போரை நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தவல்லது.
விந்தன் கட்டுரைகள் எனும் இந்நூல், செம்பாதி கருத்துக் களஞ்சியமாகவும், மறுபாதி தகவல் களஞ்சிய மாகவும் விளங்குகிறதெனில் மிகையல்ல!
கவிதைக்காரன் ஆதி