குமரி மாவட்டத் தமிழரின் படைப்பு இந்நூல். நூலின் முதல் 80 பக்கங்கள் அணிந்துரை, கருத்துரை, மதிப்புரை, என்னுரை, முன்னுரை என, தனி நூலளவுக்கு நீளுகிறது.
அண்ணாவின் பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம், கல்வி, அரசியல், பேச்சுகள், எழுத்துகள் என்று தொடரும் நூலில், ஆங்காங்கே அண்ணாவின் சிந்தனைகளும், அவற்றில் சுய முன்னேற்றம் அடங்கி இருப்பதும் எழுதப்பட்டு உள்ளது.
புத்தகங்கள் இல்லாத அறை ஆன்மா இல்லாத உடல். இதயத்தின் மகிழ்ச்சியே முகத்தின் மலர்ச்சி. உற்சாகமான சிரிப்பு உங்கள் வீட்டின் உள்ளே நுழையும் ஒளி என்றவாறு ஆசிரியரே பல பொன்மொழிகளையும், திருக்குறள் பாக்களையும் காட்டி, அண்ணாவின் வாழ்க்கையோடு பொருத்தி எழுதியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு விரிவாக எழுதப்பட்ட நூலில், பொறுமை இல்லாத மனிதன், எண்ணெய் இல்லாத தீபம் போன்றவன்.
தைரியசாலிக்கு சொற்கள் வேண்டாம் என்றவாறு நூல் முழுவதும் ஆசிரியரே பொன்மொழிகளையும் ஆக்கி உள்ளார்.
‘அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்’
போன்ற சிறந்த குறட்பாக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. அறுபது அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள நூலில், ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், அண்ணாவின் சுயமுன்னேற்றச் சிந்தனை வாழ்க! வளர்க! வெல்க!! என முடித்துள்ளார். ஆங்காங்கே அண்ணாவின் நிழற்படங்கள்- பல தருணங்களில் எடுக்கப்பட்டவை இடம் பெற்றுள்ளன. அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ஒருவாறு அறிய விரும்புவோர்க்குப் பயன்படும் நூல். ஆசிரியரின் முயற்சி பாராட்டிற்குரியது.
– கவிக்கோ ஞானச்செல்வன்