ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் குரு பரம்பரையை வரிசைப்படுத்தி, வண்ணத்தாளில், உரிய படங்களுடன், அதற்கான தகவல்களுடன் இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் முனைவர் மட்டும் அல்ல பட்டயக்கணக்காளரும் கூட. வழிவழியாக இந்த மடத்தின் சீடர் கூட்டத்தில் பிரதானமானவர் என்பதை முன்னுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக காஞ்சி மாமுனிவர், அவரது அருளுரைகள் தாங்கிய, ‘தெய்வத்தின் குரல்’ தமிழகம் நன்கு பழகியதொன்றாகும். நம் நாட்டில் வேதநெறி தழைக்கவும், அது இந்த நாட்டு மக்களின் கலாசாரத்தின் ஒன்றியது என்பதை விளக்க ஸ்ரீ ஆதிசங்கரர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.
எத்தனையோ வழிபாடுகள், காலத்திற்கு ஏற்ற முறைகளைத் தாண்டி, கலாசார சிதைவு ஏற்படும் என்ற சூழ்நிலையில், ஆதிசங்கரர் தன், 32 வயதிற்குள் ஆற்றிய பணிகள் ஏராளம்.
இந்த நாட்டில் வழிபாடுகள் ஆயிரம் இருந்த போதும், அதை ஆறு மதங்களாக்கி, அதை, ‘ஷண்மதம்’ என்ற பொதுப்பிரிவாக மாற்றிய பெருமை அவரைச் சாரும். அவரது சீடர்கள் நால்வர். அவர்களை இந்திய அல்லது அன்றைய பாரதத்தின் எல்லைகளை காட்டும் விதத்தில், நியமித்து, ‘தர்மநெறி’ தழைத்தோங்கவும் வழிகாட்டியவர். ஆகவே அவர் தான் அனைவரும் வணங்கும் தலையாய குரு என்பதுடன், அவர் சிவபெருமானின் அவதாரம் என்ற கருத்தும் உள்ளது.
உலகம் முழுவதும் நடந்த மத மாநாடுகளில் அவர் காட்டிய அத்வைத தத்துவம் இன்றும் முதலில் நிற்கிறது.
அவரது காலம் கி.பி., 8ம் நூற்றாண்டு என்பதும் அதற்கான ஆதாரங்கள் கல்வெட்டு மற்றும் தடயங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. அதே போல அன்னை சாரதை அருள்புரியும் சிருங்கேரி உள்ளிட்ட, 4 மடங்களின் வரலாறும், அதில் சிருங்கேரி அவர் முன்னிறுத்திய முதல் மடம் என்ற கருத்து இந்த நூலில் இருக்கிறது. ஆனால், அவர் வாழ்ந்த காலம் மாறுபட்டும், ஆதி சங்கரர் காஞ்சியில் கடைசியாக பீடம் அமைத்தார் என்ற தகவலும் நூலில் உள்ளது.
இதில், பகவான் போதேந்திர சுவாமிகள் ஆற்காடு நவாப் நோயைக் குணப்படுத்தியது, நாமசங்கீர்த்தனத்தை பெருமைப்படுத்தியது என்ற விஷயமும், நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த காஞ்சி மாமுனிவர் தன், 13வது வயதில் பட்டமேற்றது, என்பது உட்பட பல ஆன்மிக விஷயங்களுடன் அவருக்கு, 17 மொழிகள் தெரியும் என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குரு பக்தி தான் முக்கியமானது; அதுவே இறைவனை அடைய வழி என்று சங்கர விஜயேந்திரர் அளித்த அருளாசியும், அதற்குப்பின் மடத்தின் கிளைகள் விபரமும் உள்ளன.
காஞ்சி காமகோடி பீடத்தின் அன்பர்கள் அனைவரும் இந்த நூலை விரும்பிப் படித்து, தொன்று தொட்ட கலாசாரத்தைக் காக்க முன்வர இந்த நூல் உதவும். ஆசிரியர் முயற்சி பாராட்டத்தக்கது.
பாண்டியன்