தமிழ் சினிமா உலகில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய அறிவு ஜீவிகளில் ஒருவர் மிஷ்கின். உலக சினிமாவையும், உலக சினிமா மொழியையும் நன்கு கற்றுணர்ந்தவர்.
இவரது திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த படம். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.’ ‘சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பர். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையை விட அதீதமான உண்மைகளைக் கொண்டது சினிமா. ஒரு நாவலில் நடக்கிற நிகழ்ச்சியோ, நம் நிஜ வாழ்க்கையில் பார்த்த சம்பவமோ அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அழ வைக்காது. ஆனால், சினிமா பார்த்தால் அது உடனே நம்மை நொறுங்கிப் போக வைக்கிறது. அதீதமான உண்மை கொண்ட HYPER REALITY மீடியாவாக நான் சினிமாவைப் பார்க்கிறேன் என்கிறார் மிஷ்கின்.
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – நம்மை நொறுங்கிப் போக வைக்கும் சினிமா! உலுக்கி எடுக்கும் திரை ஓவியம்!
இந்த நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில், இந்தக் கதையில் ஒவ்வொரு ஷாட்டையும் எப்படி வைத்தேன்? ஏன் வைத்தேன்? என்று விளக்குகிறார். இரண்டாம் பகுதியில், திரைக்கதை, வசனம் தரப்பட்டுள்ளது. முதல் பகுதியைப் படிக்கும்போது மிஷ்கினின் உலக சினிமா அறிவு நம்மை பிரமிக்க வைக்கிறது!
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதையில், ஒரு கெட்டவன் மனதில் கூட நல்ல தன்மைகள் உண்டு என்றும், அந்த நல்ல தன்மை அந்தக் கெட்டவனின் செயலிலும் வெளிப்படும் என்பதையும் சொல்கிறார். அதேசமயத்தில் ஒரு நல்லவன் கூட, இக்கட்டு ஒன்று வரும்போது, கெட்ட செயலில் ஈடுபடுகிறான் என்பதையும் மிஷ்கின் சொல்கிறார்.
இடைவேளைக்குப் பின், திரைக்கதையில் பெரிதாக ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அது திருநங்கை பாரதி. இங்கு ஏன் இந்த திருநங்கை கதாபாத்திரம் என்றால், இந்தத் திரைப்படமே இரவு வாழ்க்கையைக் குறித்தது. ஒரே இரவில் நடக்கிற சம்பவங்களை மையமாகக் கொண்டு சுழல்கிறது.
மிஷ்கின் சொல்கிறார். மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமானது சிலுவையைச் சுமப்பது, தர்மத்தைச் சுமப்பது, அன்பைச் சுமப்பது. இந்தச் சிலுவைகள் மிகவும் பாரமானவை என்ற காரணத்திற்காக நிறைய மனிதர்கள் வாழ்க்கையில் சிலுவைகளைத் தூக்குவதே இல்லை!
மிஷ்கின் என்ற மேதையைத் தமிழர்கள் சரியாகப் புரிந்து கொண்டு, அவர் திரைக்கதைகளுக்குப் பேராதரவு தர வேண்டும்!
எஸ்.குரு