சோழ மன்னர்களின் பிற்காலத் தலைநகர் பழையாறை. அந்நகரின் ஒரு பகுதி தாராசுரம். தாராசுரத்தில் இரண்டாம் ராஜராஜன் எழுப்பிய சிவாலயம் உள்ளது. கலை நோக்கிலும், சமய நோக்கிலும் அச்சிவாலயம் மிகப் புகழ் பெற்றது. தராசுரம் ஐராவதீச்சுரம் என்ற உடனே பெரியபுராணச் சிற்பங்கள் எனச் சிவனடியார்களின் மனங்கள் நினைந்துருகும்.
பரத நாட்டியக் கலை வல்லவர்களின் மனங்கள், அபிநயக் கலையின் இலக்கணங்களுக்கு ஏற்ற சிற்பங்களைச் சிந்தித்து மகிழும். சிறிய வடிவங்களில் அரிய நுணுக்கங்களை உணர்த்தும் அச்சிற்பங்கள் அனைத்துத் தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
முனைவர் ஜே.ஆர்.லட்சுமி, தாராசுரம் திருக்கோவில் மாட்சிகளை விளக்குவதற்காக, அரிதின் முயன்று இந்நூலை அமைத்துள்ளார். சோழர் கால வரலாறும் இலக்கியங்களும், காலந்தோறும் சிற்பங்கள், சிற்பங்களும் முத்திரைகளும் தத்துவங்களும் என்னும் முதன் மூன்று தலைப்புகளாய் இந்நூலின் மையச் செய்திகளுக்குத் தேவையான அறிமுகச் செய்திகளை வழங்குகிறார்.
‘தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்களில் ஆடல் மகளிரின் அபிநயங்கள்’ என்ற கட்டுரை விரிவானது; நடனக் கலை பயில்வோருக்குப் பெருந்துணைபுரிவதுமாகும். இப்பகுதியில், 72 அபிநய விரல் முத்திரைகள் ஓவியங்களாகத் தரப்பட்டுள்ளன. ஐராவதீச்சுரம் ஆடல் சிற்பங்களில் அனைத்து அபிநயங்களையும் காணலாம் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சிலவற்றையேனும் சிற்பப் படங்களுடன் விளக்கியிருக்கலாம். எனினும், அபிநயச் சிற்பங்களை நூலாசிரியர் சுட்டிக்காட்டுவது போன்ற ஒரு படம், பிற்சேர்க்கையில் உள்ளது.
பெரியபுராணச் சிற்பங்கள் பற்றிய கட்டுரை கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஆறாம் கட்டுரையுள் நூலாசிரியர் பார்வையில், தாராசுரத் திருக்கோவில் சிற்ப நுணுக்கங்கள் தரப்பட்டுள்ளன. தாராசுரம் சிற்பங்களைக் கண்டு மகிழ ஆர்வத்தை விதைக்கும் நூல் இது.
– ம.வே.பசுபதி