‘மனிதர்கள், எந்த ஊர்களில் செய்த பாவங்கள் என்றாலும், அவை புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஸ்நானம் செய்தால் விலகிவிடும். புண்ணிய க்ஷேத்திரங்களிலேயே வசிப்பவர்கள் அங்கு அவர்கள் செய்யும் பாவங்கள் காசிக்கு (வாரணாசி) சென்று ஸ்நானம், தானங்கள் செய்தால் அவை போய்விடும். காசியில் வசிப்பவர்கள் பாவம் செய்தால்? அவர்கள் கும்பகோணம் வந்து ஸ்நான, தானம் செய்தால் விலகிவிடும்! சரி... கும்பகோணத்திலேயே இருப்பவர்கள் பாவம் செய்து விட்டால்?
வேறு இடமேயில்லை.
அதே கும்பகோணத்திலேயே அவர்கள் ஸ்நானம், தானம் செய்தால் போகும்!
அதனால் தான் காசியில் உள்ளோர் கூட, மகா மக ஸ்நானம் செய்ய கும்பகோணத்திற்கு வருகின்றனர் என்று, ‘சேஷ தர்மம்’ என்ற நூல், கும்பகோணத்தின் மகாமகப் பெருமையை விவரிக்கிறது.
சோழ நாட்டின் கலாசாரங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, அன்றும் இன்றும் விளங்கி நிற்பது கும்பகோணம். இந்நகரின் கல்வி பெருமையை குறிக்கும் வகையில், ‘தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்’ என அழைக்கப்பட்ட பெருமை உடையது. அதோடு தடுக்கி விழுந்தால், ஏதாவது ஒரு கோவில் வாசலில் தான் விழ வேண்டும்! கும்பகோணத்திலும், அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் அவ்வளவு கோவில்கள்!
குடமூக்கு, குடந்தை, கும்பகோணம், கும்மோணம் (சுருக்கி பேச்சு வழக்கில் இப்படியும் கூறுவதுண்டு) என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நகரத்திற்கு தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற, மூவகைச் சிறப்புகளோடு வேறு பல பெருமைகளும் உண்டு.
கும்பகோணம் கொழுந்து வெற்றிலை, கொட்டைப்பாக்கு சீவல், (எவர்சில்வர் பாக்கு வெட்டி) பன்னீர் புகையிலை, சந்தனத் தைலம், சந்தன வில்லை, விக்ரக வார்ப்பு, வெள்ளி நகைக்கு. ‘கில்ட்’ கொடுத்தல், தகரப்பெட்டி, வெள்ளி, செம்பு, ஈயம், பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்கள், பஞ்சலோக விக்ரகங்கள், இட்லி வெங்காய கொத்ஸு, கடப்பா, டிகிரி காபி இவை கும்பகோணத்தின் ஸ்பெஷல் அயிட்டங்கள்!
முனைவர் ரமணன்