தனி மனிதர் ஒருவரின் விருப்பமும், ஆர்வமும் வரலாறாக மாறியிருக்கிறது. அந்த மனிதர் பிலிம் நியூஸ் ஆனந்தன். சினிமா தொடர்பான அத்தனை தகவல்களையும் புகைப்படத்துடன் சேர்த்து வைத்து இருந்த, தகவல் களஞ்சியம் அவர். இயற்பெயர் மணி. தானாக சூட்டிக்கொண்ட பெயர் அனந்த கிருஷ்ணன். பத்திரிகைகளுக்கு திரைப்படம் தொடர்பான செய்தி,
புகைப்படங்கள் கொடுத்த காரணத்தால், பிலிம் நியூஸ் ஆனந்தன் என்று பெயர் பெற்றார். இவர் சேகரித்து வைத்திருந்த தகவல்களை வணப்படுத்துவதற்காக தமிழக அரசு கேட்டது. தன்னிடம் தகவல்கள் இருப்பதை விட, ஓர் அரசாங்கத்திடம் இருப்பது தான் நியாயம் என்று கருதி அவற்றைக் கொடுத்தார்.
ஒவ்வொரு வருடமும் வெளிவரும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல், அது தொடர்பாக நடைபெற்ற சுவராசியமான சம்பவங்கள் ஆகியவற்றைப் புத்தமாக வெளியிட்டவர்.
புதிய திரைப்படங்கள் குறித்த செய்தி உடனுக்குடன் இணையத்தில், புகைப்படத்துடன் வந்துவிடுகிறது. ஆனால் பழைய திரைப்படங்கள் குறித்த செய்தியும், அதில் நடித்த நடிகர் நடிகையர், இயக்குனர், பாடலாசிரியர் என அத்தனை தகவல்களையும் இன்றைய தலைமுறைக்கு கொடுத்து உதவியவர் ஆனந்தன்.
யார் வந்து தகவல் கேட்டாலும் இல்லை என்று கூறாமல் தகவல்களையும், புகைப்படங்களை தந்து உதவிய வள்ளல். அவருக்கோர் ஆவணம் வேண்டாமா?
அதற்காக பத்திரிகையாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள் என்று பலரின் கருத்துக்கோவையாக, கவிதையாக, கட்டுரையாக, ‘ஆனந்தன் என்னொரு ஆவணக்காப்பகம்’ என்ற இந்த நூல், வெளிவந்திருக்கிறது.
புகைப்படக்கலைஞராய் வாழ்க்கையை தொடங்கியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன், கடந்த 2016 மார்ச் மாதம் இவர் மரணமடைந்தார்.
-லலிதா