‘இந்தியா பிறந்தது’ முதல் ‘இந்தியா சுதந்திரம் அடைந்தது’ ஈறாக, 16 தலைப்புகளில் கற்கால மனிதர்கள், சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம், புத்த, ஜைன மத காலம், கிறிஸ்துவுக்குப் பின் இந்தியா, அரேபிய படையெடுப்பு, விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, ஆங்கிலேயர் வருகை, இந்திய சுதந்திரம், செண்பகராமன் வரலாறு இப்படியாக நூலாசிரியர் தனக்குத் தெரிந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
‘இயக்கர்கள்’ என்ற பழங்குடியினர், ‘யக் ஷர்கள்’ என, அழைக்கப்பட்டனர். ராமாயணத்தில் கூறப்படும், ‘இராட்சதர்கள்’ என்ற மக்களாக கூட இருக்கலாம். (பக். 27). ‘ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறம் கொண்ட மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டது. ஆரஞ்சு இந்துக்களையும், வெள்ளை கிறிஸ்துவர்களையும், பச்சை இஸ்லாமியர்களையும் குறிப்பதாகும்’ (பக். 268). இப்படி பல தகவல்கள் இதில் அடக்கம்.
ஹிட்லர், முசோலினி, செண்பகராமன் மூவரைப் பற்றியும் கடைசி, 60 பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் எந்த ஒரு வரலாற்றுச் செய்தியும் வரிசைப்படுத்தப் படவில்லை. ஆதாரப்பூர்வமாக எடுத்தாளப்படவில்லை. நாமெல்லாம் ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதி கற்கால மனிதக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களோ என்று, ஐயுறும் வண்ணம் தொடக்கக் கட்டுரை உள்ளது. இதை ஒரு வரலாற்று நூல் என்பதை விட, நூலாசிரியர் தன் கருத்தை திணித்து வரலாறாக்க முயன்றதாக கருத வைக்கிறது. அதிக கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் அதிகரிக்கும் போது, வரலாற்றை தவறாக சித்தரித்து எழுதுவது சமூக இயல்நோக்கில் சரியல்ல.
– பின்னலூரான்