சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியது விசாக நட்சத்திரத்தில். எனவே முருகனை, விசாகன் என்றும் அழைக்கின்றனர். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கார்த்திகேயன் எனப்படுகிறான். சூரனை வெல்வதற்காகப் படைக்கப்பட்ட முருகன், வீரபாகு உட்பட, ஒன்பது வீரர்களின் துணையுடன், சக்தி கொடுத்த வேல் கொண்டு தாரகாசுரனையும், சிங்கமுகனையும் மற்றும் சூரனையும் அழிக்கிறான்.
தீபாவளியும், திருக்கார்த்திகையும் ஒரே விழாக்கள் என்றும், பங்குனி உத்திரத்தில் வள்ளியை, முருகன் மணம் புரிந்தான் முதலான தகவல்களை, இந்த நூல் எடுத்துரைக்கிறது.
முருகனின் பண்டிகைகள், அனுபவங்கள், முருக பக்தர்கள் என்னும், மூன்று பிரிவுகளில், 23 தலைப்புகளில் இந்த நூல் அமைந்துள்ளது. தகப்பன்சாமி என்னும் நூலின் பெயர், முருகனைக் குறிக்கும் பெயராக அமைந்துள்ளது. தந்தையும் சாமி, மகனும் சாமி. இங்கே தந்தைக்கே சாமியாக, முருகன் விளங்கியதால், தகப்பன்சாமி என்னும் தலைப்பை இந்த நூலுக்கு சூட்டியுள்ளார் ராமசுப்பு.
முருகன் பற்றிய அறிமுகத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ள, இந்த நூலைப் படித்தால், முருகன் தொடர்பான அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும். முருகன் பற்றிய நூல்களைத் தொடர்ந்து படிக்கவும், முருகன் கோவில் கொண்டுள்ள இடங்களுக்குச் செல்லவும், தூண்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
– முகிலை ராசபாண்டியன்