பிரிக்க வேண்டும் என்று வாதிப்பதாலேயே பிரிவினை வாதம் என்று எடுத்துக் கொள்ளாமல் பகுத்து ஆராய்ந்தால் இது ஒரு சிந்திக்க வைக்கும் நூல். நூலின் தலைப்பில் வெப்பமும் வேதனையும் இருப்பதுபோல் தோன்றினாலும், தமிழகத்தின் மேற்கு, தெற்கு பகுதி மக்களின் பின்தங்கிய நிலையைப் பல கோணங்களில் ஆராய்ந்து ஆதாரங்களோடு தன் தரப்பு வாதங்களை முன்வைக்கிறார் நூலாசிரியர், முன்னாள் சுங்கத்துறை அதிகாரி, சி.க.கருப்பண்ணன் ஐ.ஆர்.எஸ்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, அந்த மாநிலத்து அனைத்து மக்களின் கலாசார, பொருளாதார, பண்பாட்டு முன்னேற்றங்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
மக்களின் உடல் நலம், மன நலம், கல்வி, ஊதியம், சமத்துவச் சூழல், வாழ்க்கைத்தரம் போன்றவற்றில் சிறந்து விளங்கினாலன்றி ஒரு மாநிலம் சிறந்து விளங்குவதாகக் கூற முடியாது. அப்படிப்பட்ட பன்முக வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணிகளாக இருப்பவை அந்த மாநிலத்தின் அனுகூலமான நிர்வாக அமைப்புகள்.
அந்த வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாமல், மேற்கு மாவட்டங்கள் எல்லாவற்றிலும் பின்தங்கி இருக்கின்றன என்பதற்கான அனைத்து வாதங்களும், இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மின்சார, மெட்ரோ, மோனோ ரயில், மேம்பாலங்கள், அகலச் சாலைகள், மருத்துவம் மற்றும் பற்பல சுகபோக வசதிகள் சென்னைக்கே செய்யப்படுகின்றன. டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த, 2 கோடி மக்களுக்கு ஒரு மாநிலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும், வலியுறுத்துகிறார்.
சத்தீஸ்கர், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், தெலுங்கானா போன்ற மாநிலங்களே சான்றுகள் என்பதும் அவர் வாதம். அதே சமயம், ஒரு சிறிய மாநிலமாக மாற்றும்போது எதிர்வரும் மத்திய அரசு, அண்டை மாநில அச்சுறுத்தல்கள், பொருளாதாரத் தன்னிறைவு, பலவீனங்கள் ஆகியவை கேள்விக்குறிகளாகவும் இருக்கின்றனவே!
நூலில் ஆசிரியர் தமது கற்பனை மாநில முன்னேற்றத்துக்கான சமூக, பொருளாதார, அரசியல் கோட்பாடுகளை விரிவாக வைத்திருக்கலாம்.