ஜோதிடத்தை முறையாகவும், சந்தேகம் ஏதுமின்றியும் பயில விரும்புவோருக்கு, இந்த நூலை விடச் சிறப்பான ‘கைடு’ கிடைப்பது அரிது என்றே சொல்ல வேண்டும்.
இன்று ஜோதிடம் பார்க்காதவர்களே கிடையாது என்றே சொல்லலாம்.
கடவுளை நம்பாத பரம நாஸ்திகர்கள் கூட ரகசியமாக தங்கள் ஜாதகத்திற்கு என்ன பலன் என்று தங்கள் குடும்பத்தவர் மூலம் பார்த்துக் கொள்ளும் காலம்! ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்ள ஒரு தொழில்முறை ஜோதிடரை அணுகாமல் தாங்களே தங்கள் ஜாதகத்தைக் கணித்து, பலாபலன்களை அறிந்து கொள்ளும் விதத்தில் நூலாசிரியர் பாடத் திட்டங்களை வகுத்துத் தந்திருக்கிறார்.
மேஷம் முதல், மீனம் வரை, 12 ராசிகளுக்கும் ஆடு, ரிஷபம், நண்டு என்று, பல உருவங்கள் சின்னமாகத் தரப்பட்டிருக்கின்றன. அந்தந்த ராசிகளுக்கு ஏன் அந்த சின்னங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஆசிரியர் அளித்துள்ள விளக்கம் மிக அருமை.
கால புருஷ தத்துவப்படி மேஷம், கால புருஷனின் லக்னமாக இதில் கருதப்படுகிறது. அது தான் உயிர். அதுவே தலையாகக் கருதப்படுகிறது. அது முதல் வீடு. அதிலிருந்து அடுத்து, 2, 3, 4 என்று, 12 வரை வீடுகள் கணக்கிடப்படுகின்றன.
லக்னத்திலிருந்து, நாலாவது வீட்டை மாத்ரு (தாய்) ஸ்தானம், சுக ஸ்தானம் என்று குறிப்பிடுகிறோம். ஏன்... வாகனத்தைக் குறிக்கவும் கூட நாலாவது ஸ்தானத்தைச் சொல்வர்.
இந்த மாத்ரு ஸ்தானமான, நாலாம் வீட்டைக் குறிக்க, நண்டு சின்னம் தரப்பட்டிருக்கிறது ஏன்? சாதாரணமாக, நண்டு சின்னம் தரப்பட்ட கடக ராசியில் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுப்பை விண்ணில், அவை பரவியிருக்கும் அமைப்பில், மானசீகமாக கோடு இழுத்துப் பார்த்தால்
ஒரு நண்டின் உருவம் புலப்படும்.
அத்துடன் ஆசிரியர் தரும் விளக்கமும் மிகவும் ஒப்புக் கொள்ளத் தக்க முறையில் அமைந்திருக்கிறது. நண்டுகளைக் கவனித்துப் பார்த்தால், ஓர் உண்மை விளங்கும். அதாவது தாய் நண்டின் வயிற்றில் பொடி டப்பாவைப் போன்ற ஒரு பெட்டி வடிவம் உள்ளது.
அதில் பல குஞ்சு நண்டுகள் இருக்கும். அதாவது சிறு குழந்தைகள், தன் தாயை ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல், குஞ்சு நண்டுகள் தாய் நண்டை ஒட்டிக் கொண்டிருக்கும். எனவே, நண்டு உருவம் தாய்மையின் அடையாளமாகும் (மாத்ரு ஸ்தானம்).
குழந்தைகளுக்கு, தாய் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து இடுப்பில் துாக்கிச் சுமக்கிறாள்.
நண்டு தன் குஞ்சுகளை சுமந்து திரியும்போது, அவற்றுக்கு தாய் நண்டு வாகனமாகவும் அமைகிறது! இதன் அடிப்படையிலேயே நான்காம் பாவம் வாகனத்தையும் குறிக்கிறது!
இப்படி, 12 ராசிச் சின்னங்களுக்கும் ஆசிரியர் அளித்துள்ள விளக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன. சற்று வித்தியாசமான ஜோதிட நூல்.
– மயிலை கேசி