சிங்கப்பூர், இன்று உலகமே வியக்கும் ஒரு நாடாக உயர்ந்து நிற்கிறது. சுத்தமான சாலைகள், புகையில்லா போக்குவரத்து, விண்ணுயர்ந்த கட்டடங்கள், மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இவையெல்லாம், சிங்கப்பூரை மற்ற நாடுகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது; உலகம் முழுவதும் இருந்து, சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கிறது.
சாதாரண நிலையில் இருந்த சிங்கப்பூர், வளர்ச்சியடைந்த நாடாக உருவாக காரணமாக இருந்தவர், அந்நாட்டின் தந்தை என, போற்றப்படும், லீ குவான் யூ.
சிங்கப்பூரின் தேசத்தந்தையாக புகழப்படும், லீ குவான் யூவின், வாழ்க்கையை முழுமையாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். லீ குவான் யூவின் ஆரம்பகால வாழ்க்கை துவங்கி, அவரது கல்வி, அரசியல் பயணம், நிர்வாக பணி, சவால்களை எதிர்கொண்ட விதம் என, பலவும் விவரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில், அப்போது ஆட்சியில் இருந்த அரசு, ஏழைகளை உறிஞ்சியது; அதற்காக கம்யூனிச கொள்கையை, லீ குவான் யூ ஏற்கவில்லை. மாற்று அரசியலை முன்வைக்க முடிவு செய்து மக்கள் செயல் கட்சியைத் துவக்கினார். 1959ல், சிங்கப்பூரின் பிரதமராக பொறுப்பேற்ற, குவான் யூவின் பயணம், 31 ஆண்டுகள் தொடர்ந்தது. அந்த காலத்தில் தரை மட்டமாக இருந்த சிங்கப்பூரைத் தலை நிமிர செய்தார். சிங்கப்பூரை உலக வர்த்தகத்தின் மையப்புள்ளியாக மாற்றிக் காட்டினார். நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு பகுதியும் அவரது பெயரை எதிரொலிக்கிறது.
கடந்த, 1960ல் சாலையில், எச்சில் துப்புவதை நிறுத்துவதற்காக இயக்கத்தை துவங்கினார், லீ குவான் யூ; மக்களை மாற்றியும் காட்டினார். மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை ஆட்சி மொழிகளாக அறிவித்தது, லீ குவான் யூவின் விசாலமான பார்வை; இதைப் பற்றி சுவையுடன் விளக்குகிறது இந்த புத்தகம்.