ஒரு புத்தகம் எவ்வளவு பயனுடையதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நூல் சிறந்த எடுத்துக்காட்டு. முதுமை வரமா, சாபமா? எனில், முதுமை வரமே என்று நிலைநாட்டுகிறது இந்நூல்.
முதுமை மனதளவில் இருந்தால் உடலும் தளர்ச்சியுறும். மனதில் இளமை குடிகொண்டால் உடலும் இளமையாக இருக்கும். நமக்கு வயதாகி விட்டது; நாம் ஓய்வுபெற்று விட்டோம் என்ற எண்ணமே பலரை முடக்கிப்போட்டு விடுகிறது.
அறுபதைக் கடந்தாலும் பொதுப்பணி, இலக்கியம், கலைகளில் ஈடுபட்டு இயங்கிக்கொண்டே இருந்தால் முதுமையும் பொலிவுபெறும். கவலைகள், மனச்சோர்வு, எதிர்மறைச் சிந்தனைகள், தீய எண்ணங்கள் இல்லாவிடில் முதுமை விலகி ஓடும். ஒழுக்கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உணவுமுறை, சிறுபிள்ளைகளிடம் அன்பு, பாசம் வளர்த்துக் கொண்டால் முதுமையே போ என எவரும் விரட்டி விடலாம்.
முதுமையிலும் சாதித்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், டாக்டர் அப்துல்கலாம், இராஜாஜி, ஈ.வெ.ரா., வேதாத்திரி மகரிஷி, நல்லகண்ணு, டாக்டர் சாந்தா, கஞ்சம் வெங்கட சுப்பையா போன்ற பற்பலரை நினைவூட்டி எழுதப்பட்ட வரிகள் அருமையானவை.
முதியோர் எத்தகைய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க வேண்டும்? முதியோர்களை அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தார் எப்படிப் போற்றிப் பேண வேண்டும்?
முதியோர் இல்லங்கள் இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? தற்போதுள்ள முதியோர் இல்லங்கள் எப்படி இயங்க வேண்டும்? உடல்நலம் பேண எத்தகைய பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்? என விளக்கியுள்ளமை அருமை.
‘நீங்களோ இசையரசி, நான் வெறும் பிரதமர் மட்டும் தான்’ என்று நேரு பெருமான் பாராட்டிய எம்.எஸ்., அம்மா, 88 அகவை வரை இசையுடனே வாழ்ந்தார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., அகவை 87ல் பாடுகிறார், இசையமைக்கிறார். நல்ல இசையைக் கேட்டு மனக்கவலைகளை மாற்றலாம்.
இன்றைக்கு ஜப்பான் நாட்டிலே தொண்ணூறு வயசு பெருசுகள் கூட சைக்கிள் மிதித்துச் செல்கின்றனர். 90 வயதுப் பாட்டி பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், இந்த வயதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டு படிப்பதில்லை. வாழ்க்கை முழுவதும் பொது நலனுக்காகவே போராடிக் கொண்டிருக்கிறார்.
கிடைத்த பரிசு, பணமெல்லாம் அவர் என்ன செய்தார்? முழுமையாய் பல தகவல்களை அறிய நூலைப் படியுங்கள். இளையவர்களும், முதியவர்களும் படிக்கத் தக்க படிக்கவேண்டிய சிறந்த புத்தகம் இது. உரிய படங்களோடு, நல்ல தாளில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நூல்.
– கவிக்கோ ஞானச்செல்வன்