பேராசிரியர் முனைவர் கே.வி.ராமன் (6, 1934) ஒரு சிறந்த தொல்லியல் துறை வல்லுனர் மட்டுமல்ல, ஒரு மிகச் சிறந்த சரித்திர பேராசிரியர் கூட. இவர் நடுவண் அரசின் (தென்னிந்திய) தொல்லியல் துறையின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். பின், 1976ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைய சரித்திரம் மற்றும் தொல்லியல் துறையின் தலைமை பேராசிரியராக பணியாற்றி, 1995ல் ஓய்வு பெற்றார்.
இவர் நடுவண் அரசின் தொல்லியல் துறையில், பணியாற்றியபோதும் சரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தலைமை பேராசிரியராக பணியாற்றியபோதும் சரி, தொன்மை வாய்ந்த புதைபொருள் ஆராய்ச்சிகளில் களப்பணி ஆற்றியதில் மிகச் சிறந்து விளங்கினார்.
இவர் களப்பணி செய்த இடங்கள் பற்றியும், அங்கெல்லாம் கண்டெடுக்கப்பட்ட தொன்மை பொருட்கள், நாணயங்கள் பற்றியும், அவை பொருட்டு இவர் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும், இவர் எழுதிய கட்டுரைகளும், ஆராய்ச்சி வெளிப்பாடுகளும் இத்துறையில் இருப்போர் அனைவருக்கும் ஒரு புதிய விழிப்புணர்ச்சியைத் தந்தது.
காஞ்சி வரதராஜ சுவாமி கோவில் பற்றிய இவரது ஆராய்ச்சிப் புத்தகம் இத்துறை மாணவர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இன்றும் இருந்து வருகிறது.
தவிர, இந்தோனேஷியாவில் பிராம்பணம் கோவில் புனரமைப்பிலும், ஆப்கானிஸ்தான் பாஹிமியான் பவுத்த குகைக் கோவிலின் புனரமைப்பிலும், இவரது சேவையை அந்நாட்டில் உள்ள தொல்லியல் துறை பயன்படுத்திக் கொண்டதை இங்கு குறிப்பிட வேண்டும்.
மேலும், காஞ்சி சங்கர மடத்திற்கு அருகில் அகழ்வாய்ந்தபோது இவரால் கண்டுபிடிக்கப்பட்ட சாத வாஹன காசு ஒன்று, சாத வாஹன அரசு காஞ்சி வரை பரவியிருந்ததை பல வரலாற்று அறிஞர்கள் அறிந்து வியப்புற்றனர். இதுவரை முனைவர் ராமன், பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும், பல்கலைக்கழகங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளையும் இப்புத்தகம் கொண்டிருக்கிறது.
இவற்றில் இவரது பரந்துபட்ட ஆராய்ச்சி அனுபவ முத்திரைகள் தெளிவாகத் தெரிவதைக் காணலாம். தன் கண்டுபிடிப்புகளை தெளிவாக எடுத்துரைக்கும் விதம், படிப்பவர் அனைவரது ஆவலை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
உறையூர், மதுரை, காஞ்சிபுரம், அரிக்கமேடு, மயிலாப்பூர், காரைக்காடு போன்ற இடங்களில் இவரது அகழ்வாராய்ச்சி பற்றிய கட்டுரைகளும், இவர் ஆற்றிய உரைகளும் இப்புத்தகத்தில் காண்பது சில உதாரணங்கள் தாம். தவிர, பிராம்மி எழுத்துக்கள் பற்றியும், நடுகற்கள் பற்றியும், பண்டைத் தமிழக வர்த்தக கழகங்கள் பற்றியும், கடல் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பற்றியும் இவர் பல அறிஞர்கள் கூடிய சபைகளில் கட்டுரைகள் அளித்திருக்கிறார்.
இப்புத்தகத்தின் இரண்டாம் பாகம் நாணவியல் பற்றிக் கூறுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கிடைத்த பண்டைய நாணயங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது.
தமிழகத்தில் ரோமானிய நாணயங்கள், காஞ்சியில் பல்லவ நாணயங்களின் அச்சுகள், இதுவரை காணக் கிடைக்காத ஒரு பல்லவ நாணயத்தின் அறிமுகம் போன்ற தலைப்புகளில் அளிக்கப்பட்ட கட்டுரைகள் தவிர, நாணயவியல் பற்றிய பொதுவான கட்டுரையும் இப்புத்தகத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தமிழக கடற்கரை நகரங்களில் ரோம நாட்டு வர்த்தகம் மிகச் சிறப்பாக விளங்கி வந்ததைப் பற்றிய கட்டுரை, இவர் அமெரிக்க புனித அன்டோனியோ பல்கலைக்கழகத்து அரங்கில் படிக்கப்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும்.
மிகச் சிறந்த சரித்திர பேராசிரியர், தொல்லியல் ஆராய்ச்சியாளர், பல்நோக்கு அறிஞர் போன்ற சிறப்புகளைக் கொண்ட முனைவர் ராமன்
அளித்த கட்டுரைகளைக் கொண்ட இப்புத்தகம், ஒவ்வொரு தொல்பொருள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களின் இல்லங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டிய வழிகாட்டி நூல்.