திருவள்ளுவர் எழுதிய ஒரே நூல் ஒப்பற்ற நூல் திருக்குறள். திருவள்ளுவர் பற்றிய புனைக் கதைகள் பற்பல; கற்பனைகள் மிகப்பல. வள்ளுவர்கள் எனும் தலைப்பிலே காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய இந்நூலில் திருவள்ளுவர் பற்றிய கதைகள் பல சுருக்கமாகச் சொல்லப்பட்டு உள்ளன.
கதைகளுக்கான களங்கள், காரணங்கள் பற்றியும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தார் என்பது ஒரு கதை. இல்லை, மதுரையில் பிறந்து வாழ்ந்தவர் என, மற்றொரு கதை. வாழ்ந்த காலம் 2,000 ஆண்டின் முன் என்பது பொதுவாக ஏற்கப்பட்டு உள்ளது.
* திருவள்ளுவர் முதல் திருக்குறளில் சுட்டிய ஆதி அவரின் தாய் என்றும், பகவன் தந்தை என்றும் சொல்லப்படுகிறது. இல்லை, உலகின் தொடக்கக் காரணமாகிய கடவுளையே அவை குறிக்கும் எனும் கருத்து வலிமையுடையது.
* பிரம்ம தேவனே திருவள்ளுவராகப் பிறந்தார். சங்கப்புலவர்களின் ஆணவம் அடக்கினார் என்றும், நக்கீரர் சிவனின் நெற்றிக்கண்ணால் எரியுண்டு வீழ்ந்தபோது, திருவள்ளுவர்தாம் நக்கீரரை மீண்டும் எழுப்பித்தர சிவனிடம் வேண்டினார்.
* சங்கப்புலவர்களோடு திருக்குறளையும் சங்கப் பலகையில் வைத்திட திருக்குறள் ஒன்றைமட்டுமே ஏற்று, புலவர் அனைவரையும் குளத்தில் தள்ளிவிட்டது என்றும் கதைக்கப்பட்டு உள்ளன.
* திருவள்ளுவர், சமணர், சைவர், பவுத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்றும் அவரவர் விருப்பின்படி எழுதி வைத்தனர். அவ்வாறே காலந்தோறும் வேறு வேறாக மாறுபட்ட தோற்றங்களில் திருவள்ளுவர் திருவுருவம் வரையப்பட்டுள்ளது. 1932 முதல் 2000 வரை பத்து வகையில் வள்ளுவர் வரையப்பட்டுள்ளார்.
* பண்டிதர் கிருஷ்ணசாமி நாயுடு, 1958ல் எழுதிய திருவள்ளுவர் காவியத்தில், கிராப்பு வைத்த திருவள்ளுவரைக் காணலாம். (மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்றவர் அல்லவா) பல நூல்களில் பல காலத்துள் எழுதப்பட்டவெல்லாம் தொகுத்து ஆசிரியர் தந்துள்ளார். முன்னரே திருவள்ளுவர் என்று ஒருநூல் எழுதியுள்ளார். ‘வள்ளுவரே திரு திருவென முழிப்பார்’ என்று முன்னுரையில் குறிப்பது நெருடலாக உள்ளது.
- கவிக்கோ ஞானச்செல்வன்