கலைஞன் பதிப்பக வைர விழாவை முன்னிட்டு, மலேஷியாவில் வெளியிட்ட, 60 நூல்களுள் இந்நூலும் ஒன்று. இந்நூல் மகாபாரதத்துள் இடம் பெற்றுள்ள வரம், சாபம் குறித்த, 30 கதைகளைத் தொகுத்துக் கூறுகிறது.
இது, மகாபாரதம் முழுமையாகப் படித்தறியாதவர்கள், அது குறித்து அறிந்து கொள்ளும்படியும், படித்தோர் என்னென்ன வரங்கள், என்னென்ன சாபங்கள் உள்ளன என, தொகுத்து நோக்கி இன்புறுவதற்கும் ஏற்ற வகையில் சுவை நிறைந்த சொல்லாடலில் அமைந்துள்ளது.
வரங்கள் என்று நோக்கும்போது நாராயணன், உத்தங்கர், சஞ்சயன், யவக்கீரிதன், பிருகத்ரதன், விருத்திராசூரன், ஜயத்ரதன், பீமன், அர்ஜுனன், குந்தி ஆகியோர் பெற்ற வரங்கள் பற்றிய கதைகள் கூறப்பட்டுள்ளன.
இதைத் தவிர, கிருஷ்ணர், திருதராஷ்டிரன், பிரம்மன் ஆகியோர் கொடுத்த வரங்களைப் பற்றிய கதைகளும், அகத்திய முனிவர் தந்த வரம் பற்றிய கதையும், பீஷ்மர் பெற்ற வரமும், சாபமும், அம்பை பெற்ற வரமும், கொடுத்த சாபமும், திரவுபதி பெற்ற வரமும் கொடுத்த சாபமும், தருமன் கொடுத்த சாபமும், துரியோதனன் கேட்ட வரமும் கொடுத்த சாபமும், காந்தாரி பெற்ற வரமும், கொடுத்த சாபமும், பீமனைப் பிடித்த பாம்பு ஆகிய கதைகள் கூறப்பட்டுள்ளன.
இதுபோன்று, அசுவத்தாமன், நகுஷன், விதுரர், கர்ணன், பாண்டு, ஜனமேஜயன், பரிஷித் ஆகியோர் பெற்ற சாபங்களைப் பற்றிய கதைகளும் கூறப்பட்டுள்ளன.
இவை சுருக்கமாகவும், தெளிவாகவும் அமைந்து படிப்பதற்குச் சுவையூட்டுவனவாக உள்ளன. அம்பை, திரவுபதி, காந்தாரி ஆகிய, மூவரும் வரங்களைப் பெற்று சாபம் அளித்துள்ளதைக் காண முடிகிறது.
இக்கதைகளை இவ்வாறு ஆய்வு நோக்கில் யார் யார் வரம் பெற்றது, வரம் கொடுத்தது, அவை என்னென்ன? சாபம் கொடுத்தவர், பெற்றவர் யார்? அவை என்னென்ன? என, நோக்குதற்கு இந்நூல், பெரிதும் உதவியாக அமையும்.
காப்பியக் கதையில் வரத்தையும், சாபத்தையும் சுருக்கி அளித்துள்ள இந்நூல் வாசகர்களுக்கு நிச்சயம் இன்பமளிக்கும்.
– முனைவர்
இரா.பன்னிருகைவடிவேலன்