‘சிறந்த சன்மார்க்கம் ஒன்றே பிணி, மூப்பு, மரணம் சேராமல் தவிர்த்திடுங்கான்’ என, வள்ளலார் வலியுறுத்திய மரணமிலாப் பெருவாழ்வை, ‘மேதினியில் மரணமில்லை’ என்னும் பாரதி (பக்.17) ஒப்பிட்டுத் தொடங்கி, வள்ளலாரும் பாரதியும் கட்டுரை முதல், ‘நான் உடலால் என் தந்தையின் மகன், உள்ளத்தால் திருவள்ளுவரின் மகனாக இருக்கிறேன்’ என்ற ‘மு.வ.,வின் படைப்பில் காந்தியக் கருத்தியல்’ ஈறாக, 10 தமிழறிஞர்கள் பற்றிய நுணுக்கமான கட்டுரைகளின் தொகுப்பு இது.
வெண்பாவிற்கு வெள்ளக்கால் எனப் போற்றப்படும் ப.சுப்ரமணிய முதலியார், கவிமணி, மறைமலையடிகள், பாரதிதாசன், மயிலை சீனி.வேங்கடசாமி, அ.கி.பரந்தாமர், கா.அப்பாத்துரையார், இலக்குவனார் போன்ற சான்றோர்களின் இலக்கிய ஆளுமையைத் திறம்பட எடுத்தாண்டுள்ளார்.
திங்கள் என்னும் தமிழ்ச் சொல்லை மறந்து, ‘மாதம்’ என்னும் வேற்றுச் சொல்லை கையாளுவதை (பக்.77) மயிலையார் நையாண்டி செய்வதையும், பா+அடை= பாவடை என்பது பாவாடையாகி, கோவில்களில் ‘திருப்பாவாடை தரிசனம்’ என்று வழங்கப்படுகிறது (பக்.83) என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைமலை அடிகளின் புதின படைப்புப் போக்கு, அ.கி.ப.,வின் மொழிபெயர்ப்புத் திறன் போன்றவை அழகாகச் சுட்டப்பட்டுள்ளன.
தமிழறிஞர்கள் ஒவ்வொருவரும் எந்தத் துறையில் தடம் பதித்துள்ளனர் என்பதை மிகத் துல்லியமாக எடுத்தாண்டுள்ள பேராசிரியரின் பணி பயனுள்ள நூலாய் பரிமளித்துள்ளது.
– பின்னலூரான்