இந்திய நாடு புண்ணிய பூமி; கர்ம பூமி. அறிவார்ந்த செம்மல்களும், தியாகத் தலைவர்களும் வீற்றிருந்து புனித வரலாறு படைத்த அதிகாரப் பீடங்கள். இன்றோ சுயநல ஓநாய்களும், ஊழல் பெருச்சாளிகளும் அபகரித்துவிட, ஆளுமைகள், ஆட்சித் துறைகள் நாற்றமெடுத்துவிட்டன.
இந்திய விடுதலைக்காக இன்னுயிரை பலியாக அளித்த தியாக மறவர்களின் வரலாற்றை நினைத்துப் பார்க்கவும் நேரமற்ற, நேர்மையற்ற மனிதர்களின் கரங்களில் சிக்கி, பாரதம் படும்பாட்டை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
கொள்கை இல்லாத அரசியல், உழைப்பற்ற செல்வம், மனமாட்சியை மீறிய இன்ப வேட்கை, மனிதனை மனிதனாக்காத கல்வி, நேர்மையற்ற வணிகம், மற்ற நாடுகளில் நாட்டின் தலையெழுத்து வகுப்பறையில் தீர்மானிக்கப்படும்போது, நம் நாட்டில் மட்டும் திரையரங்க இருட்டில் தீர்மானிக்கப்படுவது ஏன்? எனக் கொதிக்கிறார் நூலாசிரியர்.
தன்மானம் கெட்டு விலையில்லாதப் பொருட்களைத் தேடி அலையும் சமுதாயம்; அதை உழைத்துப் பெறுவதற்குரிய வழிவகைகளை சிந்திக்காத சமுதாயம். இந்த அவலங்கள் அனைத்திற்கும், தங்களுக்கும் தொடர்பே இல்லை என்று அமைதி காக்கும் மக்கள்
மந்தையை, ‘மவுன சாமிகள்’ எனச் சாடியுள்ளார்.
காந்தியாரின் சபர்மதி ஆசிரமத்தின் எளிமை; எடை பார்க்கும் இயந்திரத்தில் போட ஒரு ரூபாய் கூட இல்லாமல் தயங்கி நின்ற, காமராஜருக்குக் காசு அளித்து உதவிய நேரு! சட்டை கிழிந்திருப்பதை மறைக்கத் துண்டை வழக்கத்திற்கு மாறாக வலது தோளில் போட்ட காமராஜர், கடன் வாங்கி கார் வாங்கிய இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, அரசு பொது மருத்துவமனையில், தரையில் படுத்திருந்த முன்னாள் அமைச்சர் கக்கன், யுவான் சுவாங்கிற்குப் பரிசளிக்கப்பட்ட, 700 நூல்களைக் காப்பாற்ற கடலில் விழுந்து இறந்த இந்திய அறிஞர்கள், இப்படி எண்ணற்ற தகவல்களைத் திரட்டி சுவையுடன் அளித்துள்ளார்.
‘சுதந்திர சுவாசத்தை சூதாடித் தோற்போமோ?’ என்ற பயம் இந்நூலை வாசித்த பின் அறவே அகன்றது.
– புலவர் சு.மதியழகன்