தமிழகத்தின் இடைக்கால வரலாற்றை விளக்கும் காப்பியம் பெரிய புராணம். அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைப் பக்திச் சுவையுடன் வெளிப்படுத்தும் இந்தக் காப்பியத்தில் இடம் பெறும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் வரலாற்றை அனைவரும் அறிவர்.
பெயர் கூட அறியப்படாமல் உள்ள நாயன்மார்களும் பலர் இருக்கின்றனர். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் பக்தியுடன் இலக்கியத் தொண்டாற்றியதால் அனைவராலும் அறியப்படுகின்றனர்.
இறைத் தொண்டிற்காக மட்டும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குங்கிலியக் கலய நாயனார் போன்றோரின் வரலாறு அறியப்படாமல் இருந்தது. அவரது வரலாற்றை எளிய நடையில் சிறிய நூலாகப் படைத்துள்ளார் முகிலை ராசபாண்டியன்.
குடும்பத்தின் பசித் துன்பத்தைப் போக்குவதற்கு, மனைவி யின் தாலியை விற்று நெல் வாங்கச் சென்ற கலயனார், அந்தத் தாலிக்குக் குங்கிலியத்தை வாங்கி இறை வழிபாட்டைச் செய்து இறையடியைப் பெற்றார் என்னும் உண்மை, படிப்போரின் உள்ளத்தை உருகச் செய்கிறது.