முதல் தலைமுறைக் காதலையும், மூன்றாம் தலைமுறைக் காதலையும் ஒரு வராக நதிக்கரையின் பக்கத்தில் அமைந்திருக்கும் பெரிய குளத்தின் பகுதியின் உலவ விட்டிருக்கிறார் நாவலாசிரியை. அன்பும், தியாகமும், தேசபக்தியும் கலந்த ஒரு நவீனக் காதல் கதை.
கதையின் நாயகன் செண்பகராமன் எப்படியெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கிறான் என்பதை சுதந்திரப் போராட்டப் பின்னணியில் சுவைபடச் சொல்லி இருக்கிறார்.
இயற்கை விவசாயம் குறித்தும், நாவலாசிரியை பேசுகிறார். இயற்கை விவசாயத்துக்கு உடனே நாம் மாற வேண்டும். நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயப் போராளிகள் நமக்கு அந்த வழியை ஏற்கனவே சொல்லிச் சென்றிருக்கின்றனர். நம் பாரம்பரியங்களை எல்லாம் மெல்ல மெல்லத் தொலைத்துவிட்டு, நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல சிக்கல்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறோம்.
இயற்கைக்கு மாறான பல செயல்களைச் செய்து, செயற்கை குடிலுக்குள் நம்மை அமர்த்திக் கொண்டு இருக்கிறோம். நீர், நிலம், காற்று, உணவு என, மனிதன் உயிர் வாழத் தேவையான உயிர்க்கூறுகள் யாவும் ரசாயனக் கலப்பாகி வரும் நிலையில், இயற்கை விவசாய ஆர்வலர்கள் பலரும் பாரம்பரியத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். நம்மை மீட்டெடுக்க வேண்டும் என்றால், மீண்டும் பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்ப வேண்டியது மிகவும் அத்யாவசியம் என்கிறார்.
– எஸ்.குரு