பயண நூல் படிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். நாமும் நூலாசிரியருடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்நூல், இந்தியாவுக்குக் குறுக்கே ஜெயமோகனும், அவரின் ஆறு நண்பர்களும், 2008ல் மேற்கொண்ட பயண அனுபவம், நூலாக வெளி வந்துள்ளது.
இந்நூலில் தாரமங்கலம், லெபாஷி, பெனுகொண்டா, தாட்பத்ரி, அகோபிலம், மகா நந்தீஸ்வரம், ஸ்ரீசைலம், நலகொண்டா, பாணகிரி, வாரங்கல், கரீம் நகர், நாக்பூர், போபால், சாஞ்சி, கஜுரஹோ, பீனா, வாரணாசி, சாரநாத், போத்கயா ஆகிய 18 இடங்களுக்குச் சென்று வந்த நூலாசிரியரின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாரமங்கலத்தில் உள்ள மன்மதன் சிற்பம் மீசை இல்லாமலே மிடுக்குடன் இருப்பதாகவும் (பக். 16), லெபாஷி என்ற சொல்லின் பொருள் கூறுவதும் (பக். 21), இஸ்லாமிய சக்திகளுடன் ஓயாது போரிட்டு வந்த நிலையிலும் கூட, இஸ்லாமிய வழிபாட்டுக்கு விஜயநகரப் பண்பாட்டில் முழு அனுமதி இருந்ததற்கு ஆதாரமாக பாபையா தர்கா என்ற மசூதி பெனுகொண்டா நகரில் இருப்பதாகவும் (பக். 29), ஸ்ரீசைலம் அசப்பில் ஒரு தமிழகக் கோவில் போலவே இருப்பதாகவும், (பக். 47) தகவல்கள் உள்ளன.
அகோபிலம் குறித்த கட்டுரையில், தென்கலை சம்பிரதாயத்திற்கு அகோபிலமே தலைமையிடம் என்று சொல்வதாக ஆசிரியர் குறிப்பிடுவது தவறான செய்தி (பக். 36). வடகலை சம்பிரதாயத்திற்கு என்று இருக்க வேண்டும். நூலின் நல்ல அச்சும், கட்டுமானமும், எளிய நடையும் நம்மைக் கவர்கின்றன. நல்லதொரு பயண நூல் என்று உறுதியாகக் கூறலாம்.
– டாக்டர் கலியன் சம்பத்து