வாழ்க்கை இனியது; அதை வாழும் வகையறிந்து வாழ்ந்தால், வாழ்நாள் முழுமையும் அது இன்பம் அளிக்கக்கூடியது என்பதை மையப்படுத்தி இந்நூலின் ஆசிரியர் எழுதி உள்ளார்.
நூலாசிரியரின் நேர்மறை சிந்தனை வழியே, ஒரு அற்புதமான நூலை அவசியம் படிக்க தூண்டும் வகையில் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. ஆசிரியர் நேர்மறை சிந்தனை பற்றிய ஆங்கில நூல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்.
மண வாழ்க்கையில் கணவன் – மனைவியிடையே நிலவும் அன்பும், புரிந்து கொள்ளும் மனமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற கருத்தியலை முன்வைத்து, அதை பக்கங்கள் தோறும் பதிவு செய்துள்ளார்.
வற்றாத காதல், பரஸ்பர மரியாதை ஈருடல் ஓருயிர், அசைக்க முடியாத நம்பிக்கை, அக்கறைமிக்க புத்துணர்வு, நாணமறியா அன்னியோன்யம், முழுமையான அர்ப்பணிப்பு ஆகிய ஏழு தலைப்புகளில், எண்ணிறைந்த கருத்துகளை தந்துள்ளார்.
ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்தையும் விளக்கமாக எடுத்துரைக்கும் போது, தாம் அறிந்த செய்திகளையும், நண்பர்கள் சொல்ல கேட்பதையும் தம் கருத்துகளுக்கு இணைவாக தந்த இக்கட்டுரை நூலை பலரும் படித்து பயனடையுமாறு உருவாக்கியுள்ளார்.
வாழ்க்கையில் கணவன் – மனைவி எவ்வாறு புரிந்து வாழ வேண்டும் என்பதை பல்வேறு கோணங்களில் அலசி, ஆராய்ந்துள்ளமை போற்றுதலுக்குரியதாய் உள்ளது.
திருமண வாழ்க்கை சொர்க்க பூமியாக இருக்க வேண்டுமா அல்லது போர்க்களமாக இருக்க வேண்டுமா என்பது முற்றிலும் நம்மை சார்ந்திருக்கிறது என்ற கருத்தின் அடிப்படையில் தரும் விடைகளோடு சான்று காட்டி நிறுவிருப்பதை இந்நூலில் நன்கு விளக்கிஉள்ளார்.
பணம் மட்டும் வாழ்வில் முதன்மையானதன்று; ஒருவரை ஒருவர் ஒத்து போகும் மனம் தான் வாழ்க்கையை இனிமையுடையதாக்குகிறது என்பதற்கான சான்றாதாரங்களை முன்வைக்கிறார். கணவன் – மனைவியரிடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளார். பெண் தான் குடும்பத்தின் மையம் என்பதை வலியுறுத்துவதோடு நின்று விடாமல், கணவனின் அன்பைப் பெறுவதில் உள்ள வெற்றி கொள்ளும் வழி வகைகளை நடுநிலையோடு அலசுகிறார்.
கணவன் – மனைவி உறவில் சிக்கல் வரும் போது அதை எப்படி தீர்ப்பது என்பதற்கு பல எடுத்துக் காட்டுதல்களை சொல்லியிருப்பது யதார்த்தமாக உள்ளது.
கருத்து முரண்களால் கணவன் – மனைவியரிடையே மவுனப்போராட்டம் நிகழுமானால், அது குடும்பத்தை பேரழிவுக்கு கொண்டு வந்துவிடும் என்று எச்சரிக்கும் ஆசிரியர், கோபதாபங்களை நேருக்கு நேர் பேசி தீர்த்துக்கொள்வதன் மூலம் குடும்பத்தில் இன்பமும், அமைதியும் நிலவும் என்று கருத்துரைக்கிறார்.
பலர் முன்னிலையில் கணவனை மட்டம் தட்டு வதோ, மனைவியை மட்டம் தட்டுவதோ குடும்ப உறவை பாதிக்கும் என்பதற்காகன காரணங்களை ஆராய்ந்துள்ளார்.
எந்த ஒன்றிலும் இருவரிடையே ஒளிவுமறைவு இருக்கக் கூடாது என்ற கருத்தையும் முன்வைக்கிறார். விட்டு கொடுத்து வாழ பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாகும் என்பதை தெளிவுபடுத்துகிறார்.
இந்த வகையான நூல்கள் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளன. எனினும் இந்நூல் பல உதாரணங்கள், மேற்கோள்கள் மூலம் தம் கருத்துகளை நிலைநாட்டியிருப்பதும், எளிய இனிய விளக்கங்களை சாதாரண மக்களும் போற்றக்கூடியனவாய் உள்ளன. பயனுள்ள நூலை படைத்திருக்கும் ஆசிரியரை போற்றி பாராட்ட வேண்டும்.
– ராம.குருநாதன்