சங்க இலக்கியங்களிலே அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட நூல் என்ற பெருமையைப் பெற்ற நூலான குறுந்தொகை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா., அவர்களால், 1937ல், பதிப்பிக்கப் பெற்றது.
இந்நூலை, 82வது வயதில் பதிப்பிக்கும் உ.வே.சா., அவர்கள், 100க்கும் அதிகமான பக்கங்களில் நூலாராய்ச்சியை கொடுக்கிறார்.
அதில், ஏட்டுப் பிரதிகள் பலவற்றையும் ஒப்பிட்டு, பாட வேறுபாடுகளை குறித்துக் கொண்டது மட்டுமன்றி, பிற இலக்கண, இலக்கிய உரைகளில் காணலாகும் மேற்கோள் பாடல்களையும் குறித்து கொண்டு, குறுந்தொகைப் பதிப்பை செப்பம் செய்ததாக குறிப்பிடுகிறார்.
‘என் பிராய முதிர்ச்சி மற்றும் சரீர தளர்ச்சி காரணமாக, முன்பு போல் எந்த காரியத்தையும் நான் தனியே முடிக்க இயல வில்லை. ஆயினும், தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தலில் உள்ள பேராவல் தணியவில்லை.
தமிழ் தெய்வமே அவ்வப்போது என் கவலையை நீக்கி வருவதாக எண்ணுகிறேன்’ என, உ.வே.சா., குறிப்பிடுகிறார். அவற்றை இந்த நூலில் காணும் போது அவரது பெருமை மேலும் மிளிர்கிறது.
குறுந்தொகையின் பல்வேறு பாடல்களுக்கு, இயற்றிய ஆசிரியர் பெயர் கிடைக்கப் பெறாத நிலையில், உ.வே.சா., தம் நுண்மான் நுழை புலத்தால், அப்பாடலின் சிறந்த அடிகளையே புலவர் பெயராக குறிப்பிடுகிறார்.
கள்ளிலாத்திரையனார், ஓரேருழவனார், குப்பைக்கோழியார், நெடுவெண்ணிலவினார், மீனெறி துண்டிலார் போன்ற இன்னபிற சில சிறப்படிகள், படித்தாலே நமக்கு வியப்பும் உவகையும் ஒருசேர ஊட்டவல்லன.
இவ்வாறாக, சிறந்த சொற்றொடர் காரணமாக பெயர் பெற்ற புலவர்கள், அப்பெயராலே பிற நூல்களுள் வழங்கப்பெறுவது கொண்டு, எட்டுத்தொகையுள் முதலில் பதிப்பிக்கப் பெற்ற நூல் குறுந்தொகை என்பதை, உ.வே.சா., நிறுவும் பாங்கு மற்றும் விளக்கங்களை படித்தறியும் யாவரும், ஆய்வு, பதிப்பு அணுகுமுறைகளை அறிந்து கொள்வாரெனில் மிகையல்ல.
இவ்வாறாக, அரும்பாடுபட்டு பல்வேறு ஏட்டுப் பிரதிகளை கையில் வைத்துக் கொண்டு நுணுகி ஆராய்ந்து, குறுந்தொகையை தொகுக்கும் பணியில் ஈடுபடும், உ.வே.சா., அவற்றை எல்லாம் ஒப்புநோக்கி, பிரதிபேதங்களை குறித்துக் கொள்கிறார்.
மேலும் இப்பிரதிகள் யாவும் ஒரே மூலச்சுவடியின் பிரதியென்று துணிந்து, இனி வேறு பழைய உரை எங்கேனும் கிடைத்தலரிதென்று, தேடும் முயற்சியை கை விடுகிறார்.
அதன்பின், குறுந்தொகை மூலத்தில் காணப்பெறும் அரும்பதங்கள், சொற்றொடர், உவமை முதலியவற்றிற்கு ஓரகராதியும், புலவர் பெயருக்கென ஓரகராதியும் எழுதி வைத்துக் கொண்டே பதிப்பிக்கும் முயற்சியை செய்யத் துவங்குகிறார்.
அவ்வாறாக தம், 82ம் வயதில், குறுந்தொகையை உரையுடன் பதிப்பித்து வெளியிடுகிறார்.
செம்மாந்த தமிழின் நிகரில்லா இந்த இலக்கியத்திற்கு, ‘கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ’ எனும் ஒரு பாடலே, குறந்தொகையின் அறிமுகத்திற்கு போதுமானது.
இக்குறுந்தொகை பதிப்பை காண்ணுற்றால், மேன்மைமிகு பல இலக்கியங்களை நமக்கு பதிப்பித்து அளித்ததால், ‘காலமெலாம் புலவோர் வாயில் துதியானார் உ.வே.சா.,’ என, பாரதி வாழ்த்திய வாழ்த்தை, நாமும் முன்மொழி வோம். தமிழ்க் குடும்பங்களில் இடம் பெற வேண்டிய நூல்.
–ஆதி