எம்பிரான் தோழர் சுந்தரர் வன்றொண்டர்ஆனது எப்படி?
இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராயிருந்து சீரிய சிவனடியாராய் விளங்கி சிவப்பணியை செம்மையாய் செய்தவர் சேக்கிழார்.
சேக்கிழாரால் இயற்றப்பட்ட பெரியபுராணத்தில் காணப்படும் சிவனடியார் அறுபத்து மூவர் மற்றும் தொகை அடியார் ஒன்பதின்மர் ஆகியோர் வரலாற்றை எளிய நடையில், உரைநடை வடிவில் ஆக்கி தந்துள்ளார் நூலாசிரியர்.
புதினத்தை படிப்பது போன்ற உணர்வுடன் மேலிட சிவனடியார் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைத்து உள்ளார்.
பெரிய புராணத்தை படைக்க அகச்சான்றுகளாக அமைந்தவை, நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், சேரமான் பெருமான், திருமூலர், ஐயடிகள் காடவர்கோன் போன்றோர் இயற்றிய சைவ இலக்கியங்களே என்பதை விளக்கி, ‘எழுவரால் எழுந்தது சைவம்’ என போற்றுகிறார்.
மேற்காண் எழுவரைத் தவிர ஏனைய சிவனடியார்களின் எழுத்து சான்றுகள் இல்லை என்பதை நூலாசிரியர் நிறுவியுள்ளார்.
அங்கங்கே வாழ்ந்த சிவனடியார்கள் பற்றிய செய்திகளை கேட்டும், சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் முதலான ஆவணங்களை தொகுத்தும் அவற்றை புறச்சான்றுகளாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தை படைத்த வரலாற்றை நூலாசிரியர் விளக்கிஉள்ளார்.
‘குறிஞ்சிக்கு முருகனும், முல்லைக்கு திருமாலும், மருதத்திற்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்கு கொற்றவையும் என கடவுள்களை பட்டியலிட்ட நம் இலக்கண நூல்கள், சிவ பெருமானுக்கு என எந்த நிலத்தையும் தனியே குறிப்பிடவில்லை.
ஏனெனில், பிறவாயாக்கை பெரியோனாகிய சிவன் எல்லாரினும் பெரியவன் என ஆசிரியர் தரும் ஆய்வுரை, சிவபெருமானின் உயர்வைப் பறைசாற்றுகிறது.
பக்தி சுவை சொட்ட சொட்ட அமைந்த பெரிய புராணத்தை, அவசர யுகமாகிய இக்காலகட்டத்தில் படிக்க நேரமில்லாதவர்கள் இந்நூலையாவது படித்து, சிவத்தொண்டின் சீர்மையை உணரலாம்.
– புலவர் சு.மதியழகன்