ஒரு உயிரின் அடிப்படை அம்சம் இனம் என்பது ஹிட்லரின் நம்பிக்கை. வரலாறு என்பது இனங்களுக்கு இடையிலான போராட்டமே தவிர வேறில்லை. எந்த இனம் வலுவானதோ அது தழைத்து நிற்கும். வலு குறைந்தது அழிக்கப்படுகிறது அல்லது அழிக்கப்பட வேண்டும்.
மதம், அறம், தார்மீகம் போன்றவை தடைக்கற்கள். இவையெல்லாம் யூதர்களின் கண்டுபிடிப்புகள் என்பது ஹிட்லரின் கருத்து. மேன்மையான நிலையை அடைய வேண்டுமானால், பலவீனமான இனத்தை மட்டுமல்ல, அது உருவாக்கிய சிந்தனைகளையும் சேர்த்தே அழிக்க வேண்டும் என்பதே ஹிட்லரின் குறிக்கோள்.
இந்த பூமியை சுத்தப்படுத்த வேண்டுமானால் யூதர்களைப் பூண்டோடு அழித்தாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஹிட்லர் செயல்பட்ட வரலாறு தான் இந்த நூல்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான யூதர்களை, ஐரோப்பா முழுவதிலுமுள்ள பல வதை முகாம்களில் அடைத்து, மனம் கூச செய்யும் கொடூரங்கள் நிகழ்த்தி, மிருகத்தனமாக வதைத்தும், சிதைத்தும், கொன்று ஒழித்தனர் நாஜிகள்.
இதை விடவும் மிக கேவலமான தாழ்ந்த நிலைக்கு, மனித குலத்தால் சொல்லவே முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், அமைந்துள்ளன, ஆசிரியர் இந்த நூலில் விவரிக்கும் கொடூர காட்சிகள். இளகிய மனம் படைத்தவர்கள் இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பல படங்களை பாராமலும், சித்திரவதை வர்ணனைகளை படிக்காமலும் இருப்பது உத்தமம்.
– மயிலை சிவா