விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டி, சின்னச் சின்ன விஷயமாக இருந்தாலும் நெஞ்சின் அடியாழத்தில் பதிய வைக்க வேண்டும் என்னும் ஸ்டாலின் குணசேகரின் இந்நூலில் அவரது பதிவுகள் புதுப்புதுச் செய்திகளை உள்ளடக்கமாய் கொண்டுள்ளது.
தாகூர், காந்தியடிகளை, ‘மகாத்மா’ என்று (1921) அழைப்பதற்கு முன்பாகவே, 1912ல், மகாத்மா என்று அழைத்த பெருமை தமிழ்நாட்டுக்கு வந்து விட்டது (பக். 29).
விடுதலைப் போரின் முதல் முழக்கமே தமிழகத்தில் தான் ஒலித்தது. 1799 முதல் 1805 வரை திப்பு சுல்தான், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சகோதரர்களே, அனைவரும் இந்தியர்களே என்று ஆயிரம் முறை சுபாஷ் சந்திரபோஸ் சொல்லியதை இளைஞர்கள் உள்வாங்க வேண்டும் (பக். 96).
விடுதலைப் போரில் தமிழ் சினிமாவும் நாடகங்களும், விடுதலைப் போரில் சிறைச்சாலைக் கொடுமைகள், விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள் என, 15 சொற்பொழிவுகளின் தொகுப்பான இந்நூலில் அற்புதமான அரிய படங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும்.
விடுதலை வேள்வியில் தமிழகம் தேச விடுதலையும், தியாகச் சுடர்களும் போன்ற நூல்களைப் படைத்த நூலாசிரியரின் சுதந்திரச் சுடர்கள் என்னும் இந்நூல், இன்றைய மாணவர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் கூட படித்துப் பயன் பெறத்தக்க பயனுள்ள நூலாகும்.
– பின்னலூரான்