விஜயநகரத்து மக்களின் காலச்சுவடுகள் என்ற நூல் மூன்று பகுதிகளாக விளக்கப்படுகிறது. முதல் பகுதி முழுவதும், கல்வெட்டு ஆதாரங்களுடன் திரட்டப்பட்ட சரித்திர உண்மைகள் விவரிக்கப்படுகின்றன. கி.பி., 1283ம் ஆண்டு ராணி ருத்திரம்மா தேவியின் மறைவு, காகதீயத்தை சோகத்தில் மூழ்கடித்தது.
பெரினி சிவதாண்டத்தை நாடெங்கிலும் பரவச் செய்தாள். பாரதத்தில் மிகச் சிறந்த பெண்மணியாக பேசப்படுகிறாள் என்ற வரலாற்றுக் குறிப்பு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் தாய் தமிழ் மொழி என்பதை இந்த நூல் நிறுவுகிறது.
இரண்டாம் பகுதியில், வைணவ பக்தி இயக்கம், குலதேவதைக் கோவில்கள், பஞ்சமும் வறட்சியும், காலனி ஆதிக்கம், சோலையின் காலச்சுவடுகளும், கம்மவார் சங்கங்களின் வளர்ச்சியும் என்ற ஏழு தலைப்புகளில், மூத்தோர் பலரிடம் கேட்டு, அவற்றைப் பதிவு
செய்துள்ளார்.
உதாரணமாக, ஜி.டி.நாயுடு தன் அறிவியல் அறிவைக் கொண்டு, வெகு விரைவில் முன்னேறினார். அயராத உழைப்பு, கண்டிப்பு, நேரம் தவறாமை ஆகியவற்றைக் கடைபிடித்தார் (பக். 283).
மூன்றாம் பகுதி கருடகம்பம் துவங்கி, கருட புராணம் உணர்த்தும் உண்மைகள் வரை, நான்கு தலைப்புகளில் முற்றிலும் புதிய சிந்தனைகளை உள்ளடக்கியவை.
கருத்துச் சுதந்திரத்தின் வழி இப்பகுதியில் உள்ள கருத்துக்கள் யாவும், கடவுள் சிந்தனை, ஜோதிடம், கருட புராணம் உணர்த்தும் உண்மைகள் என்னும் கட்டுரைகள், நூலாசிரியரின் சிந்தனைப் பெட்டகம்.
வாசகர்களுக்கு ஓர் உரிமை வழங்கி, இக்கருத்துக்களை ஏற்கவும், நிராகரிக்கவும் உரிமை உண்டு என்ற சுதந்திரத்தை வழங்கி உள்ளார்.
உன்னையே நீ அறிவாய், உன்னை அறிந்து கொண்டால், இந்த உலகை ஆளலாம் என்று, மாமேதை சாக்ரடீஸ் சொல்லிய கருத்து என்பதை இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பது அருமையிலும் அருமை.
அருள் என்பதற்கு, அருள் ஒரு தெளிந்த நீரோட்டம். பொருள் என்பது, கலங்கிய நீர்க்குட்டை. சலனமற்ற மனத்தின் ஒருமுகப்பட்ட ஆற்றலால், பிரபஞ்ச ஆற்றலுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பே அருள் எனப்படுகிறது.
இவை போன்ற எண்ணற்ற தத்துவக் கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
எளிய நடையில் எழுதப்பட்ட இந்நூல், விஜய நகரத்து மக்களின் வரலாற்றை அறிய ஓரளவு துணை நிற்கும் என்று கூறலாம். இந்நூல் ஒரு வரலாற்று ஆவணம் ஆகும்.
–பேரா., ஆர்.நாராயணன்