தமிழக வரலாற்றில் பல திருப்பங்களை உருவாக்கிய அறிஞர் அண்ணாதுரையை இந்த நூல் போற்றுகிறது.
அறிவாளி, படிப்பாளி, பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நடிகர், நாடக ஆசிரியர், பலரும் போற்றும் தலைவர் என்ற பல கோணங்களில் அவரைக் காட்டுகிறார் ஆசிரியர்.
சுயமரியாதைத் திருமணத்தை சட்ட ரீதியாக்கி, ஈ.வெ.ரா.,வுக்கு காணிக்கை செய்தார். ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார்.
இளமை, அரசியல் திறமை, பேச்சு வன்மை, சமுதாய புரட்சி, எழுத்து ஆற்றல், அறிவு ஆற்றல், ஏழை மேல் நேசம், தனித் திறன்கள், நிர்வாகத் திறன் என்ற ஒன்பது தலைப்பில் நம் முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.
சிறுவயதில் குடுமி வைத்திருந்தார். அதை எடுத்துவிட தன் வளர்ப்பு சிற்றன்னையிடம் கேட்க வெட்கமும், வருத்தமும் கொண்டார்.
தான் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதற்கு பரிசாக குடுமியை எடுக்க அனுமதி பெற்றார் என்பது சுவையான செய்தியாகும். ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, தன் உழைப்பாலும், ஆற்றலாலும் தமிழக முதல்வராக உயர்ந்த பரிணாம வளர்ச்சியை எழுதிஉள்ளார்.
பிள்ளையாரை உடைக்க ஈ.வெ.ரா., சொன்னபோது, ‘நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; அவருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்றார் அண்ணாதுரை.
பெரியாருக்கு சீடராக, காமராஜரின் சில திட்டங்களுக்கு ஆதரவாளராக இருந்து, பின் தானே வழி நடத்தும் துாய தலைவராக ஆன வரலாற்றை இந்த நூல் சிந்தனையில் செதுக்கிக் காட்டுகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்