உலகின் மிக பழமையான நாடுகளில், நமது பாரத பூமியும் ஒன்று. அதனால், பாரத நாட்டின் சரித்திரம், எப்போது துவங்கியது என, யாராலும் கூற முடியாது.
ஆனாலும், பாரத நாட்டின் வரலாறு, மிகவும் சுவாரஸ்யங்கள் கொண்டது. அந்த வகையில், பாரத நாட்டின் வரலாற்றை, மிகவும் ஆழ்ந்து ஆய்வு செய்து இரு ஆசிரியர்கள் எழுதிஉள்ளனர்.
புராண காலத்திலிருந்து சமீபகாலம் வரை, இந்தியாவின் வரலாற்றை, அழகாக தொகுத்து வழங்கியுள்ளனர்.
இந்தியாவில் அன்னியர்கள் ஆட்சி அமைந்ததற்கு, நம் மன்னர்களிடம் ஒற்றுமை இல்லாமல் இருந்ததே காரணம் என்பதை, ஆதாரபூர்வமாக குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்லாமின் தோற்றம், இந்தியாவில் நடந்த முஸ்லிம்கள் ஆட்சி, அதன்பின் ஆங்கிலேயர்கள் ஆட்சி, காந்தி, நேதாஜி, நேரு, படேல், ராஜாஜி கால அரசியல் சூழல் போன்றவற்றை சிறப்பாக விளக்கியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது இருந்த நிலைமை, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட ரத்தகளரி, காந்தியடிகள் கொலை ஆகியவற்றை படிக்கிற போது நேரில் பார்ப்பது போன்ற மனநிலை தோன்றும்.
சுதந்திர போராட்டத்தில், தமிழகத்தின் பங்கு சரியாக சொல்லப்படவில்லை என்ற குறை இருந்தது. ஆனால், இந்த புத்தகத்தில், சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, விலாவாரியாக சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக, நேதாஜி, 1939 செப்., 3ம் தேதி மதுரை திலகர் திடலில் தனது பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பேசிய பிரமாண்டக் கூட்டமும் அதில் உள்ள தகவல்களும் சிறப்பானவை.
அவருடன் மேடையில் தியாகி எஸ்.சீனிவாச அய்யங்கார், பசும்பொன் தேவர் இருந்ததை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம் 583).
தமிழக வரலாற்றுச் சிறப்பையும் ஆசிரியர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
குறிப்பாக, ஆஷ் துரையை சுட்டு கொன்று, தன்னை தானே சுட்டுக் கொண்டு, வாஞ்சிநாதன் உயிர் தியாகம் செய்த சம்பவம் மட்டும் அல்ல; அதிலும், வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள், அப்போது, வயதுக்கு கூட வரவில்லை என்ற தகவல், படிப்போர் மனதை உறுத்தும்.
கல்கத்தா நவகாளி யாத்திரை பதற்ற சம்பவங்களில், காந்தியடிகள் ஆவேசப்பட்ட மக்களிடம், ‘நான் பிறப்பால் இந்து: என்னை வளர்த்து ஆளாக்கியது இந்து மதம் தான்’ (பக்கம் 678) என்ற தகவலும் உண்டு.
பெருமகனார் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை பற்றியும் இந்த நூலில் தகவல்கள் உள்ளன. ‘காந்தி சுயநலம் இல்லாதவர்’ என்ற கோட்சே தனது வாக்கு மூலத்தில் கூறியிருப்பதும், இருந்த போதும் தான் செய்த அநீதி சரியெனவும் வாதிட்டிருக்கிறார் (பக்கம் 750).
கோட்சேவை ஒரு தியாகி போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் கூட இந்நூலை படித்த பின் தோன்றலாம்.
சுதந்திரத்துக்கு பின், இந்தியா சந்தித்த பிரச்னைகள், காஷ்மீர் பிரச்னை, சீன போர், பாக்., போர், வங்கதேச பிரிவினை, இலங்கை தமிழர் பிரச்னை பற்றியும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராமஜென்மபூமி விவகாரத்தில், ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே, ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மற்றொரு தரப்பு கருத்துக்களையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆனால், நானிபல்கிவாலா, பண்டித நேரு, சுதந்திர போராட்ட வீரர் மேனன் டைரிக் குறிப்புகள் உட்பட 45 நூல்கள் பட்டியல் தரப்பட்டிருப்பதும், அவை நூலிற்கு ஆதாரமாக உள்ளது என்கிற தகவல் ஆசிரியர்களின் நல்ல முயற்சிக்கு அடையாளமாகும்.
மொத்தத்தில், இந்த புத்தகம், இந்தியாவை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், வரலாற்றின் சில பகுதிகளை அறியவும் உதவும் தமிழ் நூல் என்பது சிறப்பாகும்.
–ச.சு.,