தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனைவாரி ஆனந்தனின் கவிதைத் தொகுப்பு. பாவை இலக்கிய வகையில், கண்ணதாசனின், ‘தைப்பாவை’யை நினைவூட்டும் வகையில், சந்தம் மாறாமல், செந்தமிழ்ச் சீர்குலையாமல், ஆற்றோட்ட நடையில் தமிழ், தமிழர், சமூக நிலை, எடுத்துச் செல்ல வேண்டிய தொலைநோக்கு நிலைகளை கவிதையில் கையாண்டுள்ளார்.
‘அம்பலத்தான் அருள் பாடும்/ நாயன்மார் திருமுறையும்/ அமர் சித்தர் பெருநெறியும்/ அருள் சேக்கிழார் பாட்டும்/ கம்பருடன் அருட்பாவும்/ கண்ணதாசன் பாரதியும்/ செந்தமிழின் பெருஞ்செல்வம்/ சீராட்டு! மனப்பாவாய்’ (பக். 20).
‘இயற்கை நலம் பேணி, எழில் சார்ந்து வாழ்ந்த நிலை/ செயற்கைத் தனம்மிக்க வளர்ச்சி எனும் பேரில்/ வயல்கள் உருமாற்றம்/ வீட்டுமனை மாளிகையாய்!’ (பக். 24) இப்படி ‘மனப்பாவை’ நீள்கிறது.
சிந்தனையைத் தூண்டும், ‘மழை நீர், பைத்தியக்காரன், ஏ இந்திய இளைஞனே’ போன்ற கதைகளும் இதில் அடக்கம். சமுதாய பொறுப்புடன் எழுதப்பட்ட இவை யாவும் மரபுக் கதைகள் என்பது மற்றோர் சிறப்பம்சம்.
– பின்னலூரான்