ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தொடங்கிய அ.தி.மு.க., இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது என்பதைக் காட்டும் நூல்.
இதை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதி யிருக்கிறார். அவருடைய கருத்தில் அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டுமே கெட்டவர்கள் அக்கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரு கட்சி களையும் ஆதரித்த பா.ம.க., நிறுவனர் இப்போது இக்கட்சிகளை வெறுத்து ஒதுக்குகிறார்.
தேர்தல் வெற்றியில் பெரிய அளவு சாதனை புரியாத அவர், பல விஷயங்களில் தன் முடிவுகளை நியாயப்படுத்தி தகவல்களை வெளியிடுபவர் என்ற கருத்து பொதுவாக இருக்கிறது.
அதை இந்த நூலில், 64 தலைப்புகளில் எழுதி இருக்கிறார். தி.மு.க., வின், ‘விஞ்ஞான ஊழல்களை (பக்.45) எழுதியுள்ள ஆசிரியர் காங்கிரசுடன் அணி சேர்ந்து, அந்த ஊழல் விசாரணைகளில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தப்பியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள திருநாவுக்கரசர் முன்பு ஜெயலலிதாவுடன் இணைந்து செயலாற்ற ஜெகதீசன் என்பவர் சமாதானம் செய்ததும், அச்சமயத்தில் திருநாவுக்கரசர் எப்படி சமரசம் ஆனார் (பக்.97) என்பதும் தகவலாக உள்ளது. மரக்காணம் படுகொலையைப் பற்றிய தகவல்களில், ‘விடுதலைச் சிறுத்கைள் அம்மோதலுக்கு காரணம்’ என்பதும் (பக். 203)ல் உள்ளது.
ஜெயலலிதா மரணம், அதற்குப்பின் நடந்தவற்றை குறிப்பிடும் ஆசிரியர், பா.ம.க.,வின் தொலை நோக்குப் பார்வைகளை சுட்டிக்காட்டி அ.தி.மு.க., அஸ்தமனத்தை விரும்புவதாக நூலை முடித்திருக்கிறார். ஆனால், தன் புதல்வர் தமிழகத்தின் முதல்வராக வருவார் என்ற கருத்தை பதிவு செய்யவில்லை.
இந்த நூலை அரசியல்வாதிகள் படித்தால், பா.ம.க., கருத்துக்களுக்கு பதிலாக புதிய தகவல்கள் வரலாம்.
– பாண்டியன்