திருமாலின் அர்ச்சாவதாரம், 108 திவ்ய தேசங்களில் கலை அம்சத்துடன் திகழ்கிறது. இதில், 18 பாண்டி நாட்டுத் திவ்ய தேசத்தில் முதன்மையானது மதுரை கூடலழகர் திருக்கோவில். நாலாயிரம் திவ்யப்பிரபந்தத்தில் முதற்பாடலான பல்லாண்டு பல்லாண்டு பாடப்பட்ட புகழ் மிக்க தலமிது. நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்கியதால், யுகம் கண்ட பெருமாள் என்று இவர் போற்றப்படுகிறார். சங்கத் தமிழ் பாடல்களிலும், ஆழ்வார்களின் பாசுரங்களிலும் இக்கோவில் போற்றப்பட்டுள்ளது.
கூடல் அழகர் கோவில் வரலாறு, கோவிலின் விரிந்த அமைப்பு, கூடலழகர், மதுரவல்லித் தாயார், ஆண்டாள் சன்னதி விபரங்கள், மண்டபங்கள், ராஜகோபுரங்களின் சிறப்புகள், கல்வெட்டுகள் கூறும் அற்புதச் செய்திகள், இந்த கோவில் தினப்படி பூஜைகள் முறைகள், திருவிழாக்கள், கோவில் நிர்வாகம் அனைத்தையும் இந்த நூல் மிக விரிவாகப் பேசுகிறது.
கோவிலின் வரைபடங்களும், தெய்வ வடிவங்களும், சிற்ப அமைப்புகளும் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. வைகை ஆற்றின் வேகவதி பெயர் சிறப்பு, கூடல் புராணத்தில் உள்ளது. பரிபாடல், தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரை, சிலப்பதிகாரம் போற்றும் இலக்கியப் பெருமைகள் கூறப்படுகின்றன.
எட்டு பிரகாரங்கள் கொண்ட கூடலழகர் கோவில் கட்டமைப்பும், சிற்ப நுட்பங்களும், பெருமாள், தாயார், ஆண்டாள் வண்ணப் படங்களும், பட்டாச்சாரியார்கள் செய்யும் கோவில் பூஜைகள், திருவிழாக்கள் விபரங்கள் வரிவாகத் தரப்பட்டுள்ளன.
பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடலும், திருமங்கை ஆழ்வார் பாடலிலும் கூடலழகர் போற்றப்படுகிறார். எம்பெருமானார் ராமானுஜரும் பாடி மகிழ்ந்ததை ஆசிரியர் விளக்கி உள்ளார். பாடல் கண்டு, தேடல் கொண்டு பல செய்திகளால் கூடல் அழகரைப் போற்றும் நல்ல நூல்!
– முனைவர் மா.கி.ரமணன்